Saturday, September 30, 2023

ஒழிக்கப்பட வேண்டிய நோய்

 உலகில் ஒழிக்கப்பட வேண்டிய நோய்கள் பல உண்டு. தீ-உயிராக (Virus) உடலுக்குள் நுழைந்து ஆளைக் கொல்வது முதல் மூளைக்குள் தீ எண்ணமாக நுழைந்து நன்மனதைக் கொல்வது வரை நோய்கள் பலவிதம், ஒழிக்கப்பட வேண்டியதும் பலது உண்டு.

உலக வரலாற்றில் மனிதகுலத்தின் அதிகாரம் (Dominance) நாம் சிந்திக்கத் துவங்கிய பின் வெகுவாக வேகம் எடுத்தது. அதற்கு முன்பு நாம் மற்ற குரங்கின (Primitive) கூட்டத்தைப் போல பத்தோடு பதினொன்றாக ஏனோதானோ என்றே இருந்திருக்கிறோம். சிந்தனைப் பொறி தட்டிய உடனேயே "முதல் நிலை வேட்டையாடி" (Apex predator) ஆவதற்கான பாதையில் நகரத்துவங்கிவிட்டோம். ஆனால், சிந்தனை, நினைவாற்றல், அதை ஒட்டிய செயல்திறன் என்பன ஒருங்கிணைந்து அறிவார்ந்த (Cognitive) குழுவாக நாம் மாறிய போது நம்முள் பிளவுகளும் போட்டிகளும் தோன்றின என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

இன்றுவரை தொடர்கிறது. சமூக வாழ்விலும், அரசியலிலும், நாம் இன்னொரு மனிதனுடன் போட்டியிடும் எல்லா இடங்களிலும் பிளவுகள்  நீக்கமற உள்ளது. அதைத் தவறு என்றும் சொல்வதற்கில்லை. நம் முன்னேற்றத்துக்கான உந்துதல் இன்னொரு குழு/தனி-மனிதப் போட்டிகளில் இருந்தே பிறக்கிறது.

போட்டிகள் சரி என்றாலும் ஒரு அறிவார்ந்த சமூகமாக, பகிர்ந்துண்டு எல்லோரும் பசியாறி இன்புற்றிருக்க தடையாக இருப்பது மாறுபட்ட சிந்தனை கொண்டோர் மீது வளர்த்துக் கொள்ளும் வெறுப்ணர்வு. பழைமை விரும்பும் யானை, செலவை விரும்பும் கழுதை, நோயுற்று தடுமாறும் இலை, சுட்டெரிக்கும் சூரியன் என எந்தக் குழுவில் இருந்தாலும் எதிர்க் குழுவினர் மீது வெறுப்பை (Hate) வளர்த்தல் நல்லதுக்கில்லை. அப்படியான சூழல் உருவாவதை நோய் என்கிறார் ஐயன் வள்ளுவர்.

திருக்குறளில் நட்பியல் எனும் பகுதியை மட்டும் தனியாக ஒரு ஆராய்ச்சி நூலாகவே பதிப்பிக்க முடியும். அதன் அதிகார வரிசை அமைப்பும், உள்ளடக்கமும் ஆழ்ந்து படிப்போரை அசரடிக்கும் அடர்த்தி கொண்டது. நட்பு என்பதை எப்படி கவனமாக அமைத்துக்கொள்ள வேண்டும், தீய நட்பு, கூடாத நட்பு, பேதைமை (லூசுத்தனம்) என நட்பு மெதுமெதுவாசச் செல்லும் பாதையிலேயே அதிகாரங்கள் வரிசையாக வருகிறது. நட்பு திரிந்து கடுப்பாகி வெறுப்பு தோன்றுவது பகை உண்டாகும் முன் என அசத்துகிறது குறளின் அதிகார அமைப்பு.

வெறுப்புணர்வு துளிர்விடுவதைப் பற்றி எச்சரிக்கும் அதிகாரம் இகல்.

அந்த அதிகாரத்தின் முதல் குறள்,
"இகல் (வெறுப்புணர்வு) என்பது உயிர்களிடையே பிரிவினை எனும் பண்பற்ற தன்மையைப் பரப்பும் நோய்" என்கிறார்.

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்


இகல் என்பது எல்லா உயிர்க்கும் பகல் எனும்
பண்பின்மையைப் பரப்பும் நோய்

இகல் = வெறுப்புணர்வு
பகல் = பகுதல் = பிரிவினை
பாரிக்கும் = பரப்பும்

முழு அதிகாரமும் இகல் எனும் வெறுப்புணர்வை ஒழித்தால் கிடைக்கும் நிம்மதி, இன்பம், நன்மை பற்றி பேசுகிறது.

வெறுப்பை ஒழிக்க முடியாமல் போனால் பகை மூளும் என அடுத்த அதிகாரமே பகை பற்றித் துவங்குகிறார்.

அடுத்த மனிதனோடு பிளவை உண்டாக்கி, சமூகத்தில் நீதியைக் குலைக்கும் சிந்தனைகள், வேறுபாடுகள், வெறுப்பு என்பன நோய்களேதான். ஒழிக்கப்படட்டும். பிறப்பு நம் எல்லோருக்கும் ஒரே முறைதான், இப்பிறப்பில் நம்மைப் போலவே எல்லோரும் பிறப்பொக்கும் என வேறுபாடு களைந்து மனிதம் தழைக்கச் செய்வோம்.

--------

Thursday, August 31, 2023

சாப்பாட்டுக்கு முன், சாப்பிட்ட பின்.

 

உலகம் முழுக்க "பெரிய" நோயாக மாறி வருவது உடல் எடை கன்னா பின்னான்னு கூடிப் போவது.

பல காரணிகள் இதற்கு இருந்தாலும் தேவைக்கு மேல் உண்பது பெரிய காரணமாக இருக்கிறது. உணவுப் பற்றாக்குறையை அறிவியலின் துணை கொண்டு வென்று விட்டோம். மனித வரலாற்றில் உணவு இவ்வளவு எளிதில் எப்போதும் கிடைத்ததில்லை. ஆனாலும் பஞ்சங்கள் பல கண்ட மனிதன், உணவைப் பார்த்ததும் பாய்ந்து விடுகிறான்.

இன்றைக்கு கைக்கு எட்டிய தொலைவில் எப்போதும் ஏதோ ஒன்று தின்பதற்கு இருக்கிறது. இனிப்பாக, காரமாக, உப்பாக என சுவையாக ஏதோவொன்று நினைத்த போதெல்லாம் தின்பதற்கு பக்கத்திலேயே வைத்திருக்கிறோம். தின்று தின்றே ஒரு வழியாகிறோம்.

போதாக்குறைக்கு தூக்கம் என்பதை ஏதோ நேரத்தை வீணடிக்கும் ஒன்றாக நினைத்து தூங்கும் நேரத்தை வெகுவாகக் குறைத்துக் கொண்டோம். உடலுக்குத் தேவையான ஓய்வைக் குறைத்து, தேவைக்கும் அதிகமான உணவை உள்ளே தள்ளி பெருத்துப் போய் விடுகிறோம். மருத்துவர்களும் ஆய்வாளர்களும் இந்தப் போக்கை சரி செய்யச் சொல்லி மன்றாடுகிறார்கள்.

நம் நண்பர் மருத்துவர் பழனியப்பன் மாலை மங்குவதற்குள் உண்டு முடித்து பின் கொஞ்சம் சுறுசுறுப்பாக இருந்து நல்ல உறக்கம் கொள்ளுங்கள்; நலம் கொடுக்கும் உணவை கவனமாக, அளவாக உண்டு நோயைத் தவிருங்கள் மருந்தின்றி நல்வாழ்வு வாழலாம் என ஒரு முழு நீள தொலைக்காட்சித் தொடரே கொடுத்துக் கொண்டிருக்கிறார். கேட்போர் கேட்கட்டும், கேட்டு நல்லபடியாக நடப்போர் நடக்கட்டும். கேளாதோர் மருத்துவமனைக்கு நடக்க வேண்டியிருக்கும்.

ஏன் நலம் கொடுக்க வேண்டிய உணவே உடலைக் கெடுக்கும் நஞ்சாகிறது? உண்பது மகிழ்வாக இருக்கிறது ஆனால் தீங்கு விளைவிக்கிறதே ஏன்? குறைவாக உண்டாலும் சிக்கல், நிறைய உண்டாலும் சிக்கலாகிறதே ஏன்?

பதில் சொல்கிறார் ஐயன் வள்ளுவர்.

மருந்து என ஒரு அதிகாரம் நட்பியலின் கீழ் எழுதுகிறார். அதன் பத்து குறள்களில் ஏழு குறள்கள் உணவைப் பற்றியது. கிட்டத்தட்ட எல்லா குறள்களிலும் அவர் அழுத்தி அழுத்திச் சொல்வது "அளவோடு உண்" என்பதைத்தான்.

நம் விருப்பத்திற்கு ஏற்ற உணவை உண்ணலாம். புலால் வேண்டாம் என அவர் வலியுறுத்துவது துறவற இயலில், துறவிகளுக்கு. மற்றவர்களுக்கு அவர் சொல்லும் கட்டுப்பாடு உணவின் அளவு மீதுதான். மரக்கறி உணவோ புலால் உணவோ, அளவோடு உண்டால் சிக்கலில்லை.

சாப்பிட்ட சாப்பாடு செரிச்சுதா என கவனிச்சு செரிச்சபின் அடுத்த முறை சாப்பிடுவது நீண்ட நாள் நல்லபடியாக வாழ்வதற்கான வழி; செரிச்சு இருந்தாலும் பசித்த பின் சாப்பிடு; மிகப் பிடிச்ச உணவு என்றாலும் கூட "போதும்" என அளவோடு சாப்பிட்டால் துன்பமில்லை, பெருந்தீனி தின்பவர் நோய்க்கு ஆளாவது தவிர்க்கவே முடியாத ஒன்று என தலையில் குட்டாத குறையாக சொல்கிறார்.

மருந்து என பெயர் கொண்ட அதிகாரமில்லையா, மருந்தைப் பற்றி சொல்லாமல் இருப்பாரா? சொல்கிறார். அதில் ஒன்று,

என்ன சாப்பிட்டோம், சாப்பிட்டது ஒழுங்காகச் செரித்ததா என்பதை கவனத்தில் கொண்டு அடுத்த வேளை சாப்பாட்டுக்குக் கை கழுவினாய் என்றால், மருந்து என்பதே உன் உடலுக்குத் தேவைப்படாது என்கிறார்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்


மருந்தென வேண்டாவாம் = மருந்து என்பதே தேவையில்லை
யாக்கைக்கு = உடலுக்கு
அருந்தியது = உண்டது
அற்றது = செரித்தது
போற்றி = கவனத்தில் கொண்டு
உணின் = உண்டால்

"உண்டதையும், செரித்ததையும் கவனத்தில் கொண்டு சாப்பிட்டு வருவோர்க்கு மருந்து என்பதே தேவையில்லை" என்கிறார்.

நல்ல சாப்பாட்டை அளவோடு சாப்பிட்டு வருவோர்க்கு "சாப்பிடும் முன், சாப்பிட்ட பின்" என எந்த மருந்தும் தேவைப்படாது.

ஐயன் வள்ளுவராகட்டும் மருத்துவர் பழனியப்பனாகட்டும், அவர்கள் சொல்வதெல்லாம் "போதும் என்ற வயிரே பொன்னுடல் போற்றும் வழி" என்பதுதான். வாயைக் கட்டி, வயிற்றையும் கட்டி உடலையும் ஆயுளையும் கெட்டியாக்குவோம்.

Monday, July 31, 2023

செங்கோலும் கண்ணீரும்

 

உலகம், மக்கள் நலம் நாடிய மாபெரும் மன்னர்களை மட்டுமல்ல, வழிநெடுகிலும் கொடுங்கோலர்களையும் கண்டே வந்து கொண்டிருக்கிறது.

தம் குடிமக்கள் இயல்பாகச் சந்திந்த பிணி- மூப்பு-சாவு எனும் துன்பங்களைத் தம் இளம் வயதில் கண்டு, குழம்பிப் போய், பதவியைத் துறந்து, துன்பத்தில் இருந்து விடுதலைக்கான விடைதேடச் சென்றார் புத்த பிரான். வசதியான அரண்மனை வாழ்வை, அழகிய குடும்பத்தைப் பிரிந்து ஏன் என் குடிமக்கள் துன்பப்படுகிறார்கள்? ஏன் என்னால் மன்னனாக எதும் செய்ய இயலவில்லை? இதற்கு விடை கண்டே தீர வேண்டும் என தன்னைத்தானே வருத்தி, நீண்ட தேடலுக்குப் பின் மெய் அறிந்தார். மனித வாழ்வே மகத்தானது, வெற்று ஆசைகள் அதனைக் குலைத்துப் போடுகிறது, ஆசையே துன்பத்திற்குக் காரணம் என போதித்து மக்களை சிந்திக்கத் தூண்டினார்.

உலகம் அவரையும் பார்த்தது, அவரைத் தொடர்ந்த அசோகர் போன்ற கருணையாளர்களையும் ஆட்சியாளர்களாகக் கண்டது. மனித உயிர்கள் மட்டுமல்ல, எல்லா உயிர்களும் உன்னதமானவையே என்று அறிவித்து மனித வரலாற்றில் விலங்குகளுக்கும் மருத்துவமனைகளை அமைத்த மென்மனம் கொண்ட மனிதர் அவர்.

புத்தர், அசோகர் போன்றோரை மட்டுமல்ல, ஆசையே உருவாகக் கொண்ட ஆட்சியாளர்களும் வந்த வண்ணமே இருக்கிறார்கள். அவர்கள் கையில் சிக்கிய செங்கோல் வளைந்து கொடுங்கோலாக மாறி மக்களை வதைக்கும் சூழல்களும் வரலாறு பார்த்துதான் வருகிறது. தமிழில் "கொடு" என்ற சொல்லுக்கு "வளைதல்" என்று ஒரு பொருள் உண்டு. கடமை தவறி, அறவழியில் இருந்து வளைந்து போன செங்கோல், வளைந்தகோல் = கொடு+கோல் = கொடுங்கோல் என்றாகிறது.
கோல் என்பது ஆட்சி - குச்சி அல்ல.

நிற்க. தலைப்புக்கு வருவோம்.

ஐயன் வள்ளுவர் இக்கொடுங்கோலர்களை நோக்கி அரசியல் எனும் இயலில் "கொடுங்கோன்மை" என ஒரு முழு அதிகாரம் ஒதுக்கி எச்சரித்துத் தள்ளுகிறார்.

அந்த பத்து குறட்பாக்களில் ஒன்று இயலாமையில் கண்ணீர் சிந்தும் குடிமக்களைக் குறிக்கிறது. ஆட்சியாளர் பெரும் வலிமையோடு அதிகாரத்தில் அமர்ந்து இருப்பவராக இருக்கலாம். எதிர்க் குரல்கள் ஓசையின்றி அமைதியாக்கப்படலாம். குடிமக்கள் எதுவும் செய்ய முடியாத இயலாமைச் சூழலில் தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால், அந்தக் குடிமக்கள் ஆற்ற முடியாத துன்பத்தில் சிந்தும் கண்ணீர், சிறுகச் சிறுகவேனும் ஆட்சியாளரின் வலிமை, அதிகாரம், செல்வாக்கு என எல்லா செல்வத்தையும் தேய்த்து அழிக்கும் கருவியாகிவிடும் என எச்சரிக்கை ஒலிக்கும் குறள்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை


அல்லல்பட்டு = துன்பப்பட்டு
ஆற்றாது = தாள முடியாமல்
அழுத கண்ணீர் அன்றே = அழுத கண்ணீர் அல்லவோ
செய்வத்தை = ஆட்சி, அதிகாரம் எனும் செல்வத்தை
தேய்க்கும் = சிறுகச் சிறுக அழிக்கும்
படை = கருவி

எந்த ஆட்சியாளரும் எவ்வளவு வலிமையானவராகத் தோற்றமளித்தாலும், குடிமக்கள் கண்ணீர் சிந்தும்படி ஆண்டால் அவரது எல்லா செல்வமும் தேய்ந்து அழிந்து போகும் என எந்த நாட்டுக்கும், எந்தக் காலத்துக்கும் பொருந்தும் படியாக ஒலிக்கும் எச்சரிக்கை மணிக் குறள்.

 



Sunday, July 2, 2023

கலகத்தலைவன்

 

உலகில் நாம வந்த நாள் முதல் ஏமாற்றவும் ஏமாறவும் ஆள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பார்த்து நம்மை எச்சரிக்கவும் கலகக்காரர்கள் இருக்கிறார்கள்.

பொதுவாக மக்கள் உணர்ச்சித் திலகங்கள். ஏமாற்றுவது எளிது. பரிதாபமாக மூஞ்சி வெச்சுட்டு பச்சைப் பொய் சொன்னா கூட நம்மாளுகள்ல பாதி பேராவது நம்பிடறாங்க. சாமி சமாச்சாரம்னா அவ்ளோதான், பேச்சே கிடையாது. சரக்குக்கும் சாமிக்கும் தான் கூட்டமே நம்மிடையே. கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றும் களவாணிகளுக்கு வேலை பட்டென முடிகிறது எப்போதும்.

கலகக்காரர்களும் சமூகப் போராளிகளும் எச்சரிக்கை மணி அடிச்சுட்டே தான் இருக்காங்க, நமக்குத்தான் அவ்வப்போது காது, மூளை எல்லாம் தூங்கப் போய் விடுகிறது.

நம்மாளு வள்ளுவர் அப்படியான ஒரு கலகத்தலைவர். துறவு கொள்ளப் போகிறேன் என்பவனிடம் பேசுவது போல ஆரம்பிச்சு நமக்கு பல எச்சரிக்கைகளைக் காட்டுகிறார் துறவறம் என்ற பகுதியில்.

பதிமூன்று அதிகாரங்கள் அதில் எழுதுகிறார். துறவி ஆகப்போகிறேன் என்பவரிடம் என்ன செய்யணும் என்ன செய்யக்கூடாது என்று பட்டியல் போடுகிறார்.

திருடாதே, பொய் பேசாதே, சிடுமூஞ்சியாட்டம் இருக்காதே, கெடுதல் செய்யாதே அப்படின்னு போய்டே இருக்கு. அதில் பலமா யோசிக்கற மாதிரி ஒரு அதிகாரம். "கறி திங்காதே" என்று. என்னடா, சாமியாரா போறேங்கறவன்ட இதச் சொல்றாரேன்னு யோசிக்க ஆரம்பிச்சா, "யோவ் வள்ளுவரு செம ஆளுய்யா நீ" என சொல்லத் தோன்றும். கறி தின்றதும் திங்காததும் அவனவன் விருப்பம்; பெரிசா "அறிவுரை" சொல்ல யாரும் வரவேண்டாம், ஆனா நான் "முற்றும் துறக்கப் போகிறேன்" அப்படிங்கறவன்ட, "மொதோ பிரியாணி குண்டான கீழ வை" என்பதில் தப்பில்லை என்று நினைத்திருக்கிறார். சரியாத்தான் படுது. யோசிக்க யோசிக்க ஆளு உண்மையிலேயே கன்னியாகுமரில நிக்கிற மாதிரி பெரிசா மனசுல தெரியறார்.

"வேண்டாத வேலை"* அப்படின்னு ஒரு பத்து குறள் சாமியாரா போறவனுக்கு சொல்ற மாதிரி.

மனசுல வஞ்சம் வெச்சுகிட்டு சாமியாரா போறேன்னு சொன்னா வேற யாரும் வேண்டாம் உன் உடம்பே உன்னைப் பார்த்து சிரிக்கும்டா என்கிறார். மனச ஒழுங்கா வெச்சுக்காம பெரிய ஆளாட்டம் படம் போட்டாய்னா ஒரு பயனும் இல்லை தெரிஞ்சுக்கோ என்று திட்டுகிறார் இன்னொரு குறளில். வெள்ளையும் சொள்ளையுமா வேசம் போட்டுகிட்டு வேண்டாத வேலை எதும் செய்யறது, புதர்க்குள்ள ஒளிஞ்சி அப்பாவிப் பறவைகளைப் பிடிக்கும் வேடன் செய்யும் செயல் போல தரங்கெட்டது என கடுமையாகத் திட்டுகிறார்.

இப்படி சாமியார் பயலுகளைத் திட்டிகிட்டே வர்றவர் மெதுவாக நம்மை நோக்கி பேசத் துவங்குகிறார்.

மனசுக்குள்ள அழுக்கை வெச்சுட்டு எவ்ளோ தண்ணில முங்குனாலும் அழுக்கு போகாது. அழுக்கு மனசோட பல பேர் சாமியார்னு திரியறான் கவனம் என்கிறார். ஆளப்பார்த்து எதையும் முடிவு செய்யாதே. நேராக இருக்கும் அம்புதான் கொல்கிறது. வளைஞ்சு வளைஞ்சு இருக்கும் யாழ் அருமையான இசை கொடுக்கிறது. செய்யும் செயலைக் கொண்டே ஒருவர் எப்படியானவர் என்பதை உணர வேண்டும், புரியுதா? என்கிறார்.

எல்லாம் சொல்லிட்டு, கடைசியா
"இவனுக ஏன் ஒன்னு மொட்டையடிச்சுட்டு திரியறானுக, இல்லைன்னா கசாமுசான்னு முடி வளர்த்திட்டு திரியறானுக, உலகத்தார் முகம் சுழிக்கற மாதிரி நடந்துக்கறத நிறுத்தினாலே போதும்" என முடிக்கிறார்.

அப்போது இருந்தே இவனுகளால ஏதோ நடந்துகிட்டு இருக்கு. கடுப்பாகி திட்டித் தள்ளி இருக்கார்.

முழு அதிகாமுமே நையாண்டியும் திட்டுகளும்தான். கூடவே கலகக் குரல். சமயம் எனும் மனதை மயங்கச் செய்யும் கருவியைப் பற்றி எச்சரிக்கைகள், கிண்டல்கள் எப்போதும் பெரியோர் செய்துதான் வருகிறார்கள்.

நாமதான்...

மேலே கடைசியாகக் குறிப்பிட்ட குறள்:

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.

மழித்தல் = மொட்டை அடித்தல்
நீட்டல் = நீண்ட முடி வளர்த்தல்

படித்தவுடன் அப்படியே புரியும் இன்னொரு அட்டகாசமான குறள்.

-------
* "வேண்டாத வேலை" = கூடா ஒழுக்கம்

Friday, June 30, 2023

அவள் என்றைக்கடா பேசினாள்?

 உலகில் நாம் தோன்றிய நாள் முதலாக கலகக்காரர்கள் ஏமாற்றுவோரை நோக்கி சுடு கேள்விகளையும் பகுத்தறிந்த ஆழ்ந்த சொற்களையும் வீசியபடியே தான் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்.

பொதுவாக மக்கள் உணர்வு மயமானவர்கள். எளிதில் ஏமாற்றி விட முடியும். அதிலும் அறிவை வேகமாக மழுங்கடிக்கும் சமயம் எனும் கருவி ஏமாற்றுக்காரர்களுக்கு மிகப் பிடித்தமானது. தகவல் பரிமாற்றம், தொழில்நுட்பம், போக்குவரத்து, பொது அறிவு வளர்ந்திருக்கும் இன்றைய உலகிலேயே இன்னமும் ஏமாற்றவும் ஏமாறவும் ஆள் இருக்கும் போது வள்ளுவர் காலத்தில் பாமர மக்கள் எவ்வளவு ஏய்க்கப்பட்டிருப்பார்கள்?

மின்சார விளக்கு வந்த பின் பேய்கள் ஒழிந்துவிட்டன என்பார்கள். பாதி ஏமாற்றுக்காரர்களும் கூடவே ஒழிந்து போனார்கள். மீதிப் பாதியை ஒழிக்க ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு வரும் வரை கலக்காரர்களின் தேவை கண்டிப்பாகத் தேவை.

இப்போது நம் கலகக்காரர் வள்ளுவரின் கலகக் குரலில் ஒன்றைப் பார்ப்போம். துறவற இயல் எனும் பிரிவில் பதிமூன்று அதிகாரங்கள் எழுதுகிறார். துறவியாகும் எண்ணம் கொண்டோருக்கு கைவிளக்காக செய்ய வேண்டியவற்றை, வேண்டாதவற்றைப் பட்டியலிடுகிறார்.

கள்ளாமை, வாய்மை, வெகுளாமை (சினம் கொள்ளாத தன்மை), இன்னாசெய்யாமை என பட்டியல் நீள்கிறது. மிகவும் யோசிக்கும்படியாக "புலால் மறுத்தல்" என்பதை துறவற இயலில் வைத்திருக்கிறார்.
ஆம். இல்லறவாசிகளுக்கு சொல்லவில்லை - ஊண் உண்பதும், மரக்கறி மட்டும் போதும் என்பது அவரவர் விருப்பம். எவரும் "அறிவுரை" சொல்லக்கூடாது; ஆனால் துறவிக்கு புலால் மறுத்தல் கண்டிப்பான ஒன்று என நினைத்திருப்பார் போல.

அரைக்க அரைக்க மணக்கும் சந்தனம் திருக்குறள்.

கூடா ஒழுக்கம் என்ற தலைப்பில் துறவியாக மாற எண்ணுபவரின் வேண்டாத ஒழுக்கம் பற்றி நக்கலும் நையாண்டியுமாக எழுதுகிறார்.

மனதில் வஞ்சம் வைத்துக்கொண்டு, துறவி என்பாயானால் உன் உடம்பு கொண்டுள்ள ஐம்பூதங்களே உன்னைப் பார்த்து சிரிக்கும்டா என்கிறார். மனதுக்குள் குற்றம் வைத்துக்குக் கொண்டு வானுயர்ந்த தோற்றம் கொண்டவர் போல காட்டிக் கொண்டால் அந்தத் தோற்றத்தால் ஒரு பயனும் இல்லை. உயர்ந்த தோற்றத்தில் மறைந்து கொண்டு வேண்டாத வேலைகளைச் செய்வது, புதருக்குள் மறைந்து இருந்து அப்பாவிப் பறவைகளை ஏமாற்றிப் பிடிக்கும் வேடனின் செயலைப் போன்றது.

என்றெல்லாம் துறவு பூண எண்ணுபவருக்குச் சொல்லிக் கொண்டே வந்தவர் குரல், மெதுவாக நம்மை நோக்கி பேசுவது போல மாறுகிறது அந்த அதிகாரம்.

மனதுக்குள் அழுக்கை வைத்துக் கொண்டு எவ்வளவு குளித்தாலும் பயனில்லை, அழுக்கு மனதோடு துறவி வேடத்தில் பலர் உள்ளனர். கவனம். என்கிறார். அடுத்ததாக‌, ஆளைப் பார்த்து முடிவு செய்திடாதே - துறவி வேடம் போட்டு இருப்பவர் நல்லவராக இருக்க வேண்டும் என்பது இல்லை. வளையாமல் நேராக இருக்கும் அம்புதான் கொல்கிறது. வளைந்து இருக்கும் யாழ் நல்லிசை தருகிறது. செயலைக் கொண்டே அவர் பண்பை உணர வேண்டும்; கவனம். என்கிறார்.

முத்தாய்ப்பாக,
மொட்டையடித்துக் கொண்டு அல்லது நீண்ட முடி வளர்த்து இவனுக எதுக்கு இப்படித் திரியணும்? உலகத்தார் முகம் சுழிக்கும்படி நடக்காது இருந்தாலே போதும், இந்த பம்மாத்துகள் தேவையில்லை என்கிறார்.

முழு அதிகாரமுமே ஒரே எள்ளலும் ஏச்சும்தான். கூடவே கலகக் குரல். அப்போது இருந்தே சமயம் எனும் மனம் தடுமாறச் செய்யும் கருவியை எதிர்த்து, முழுதாக எதிர்க்க முடியாத போது குறைந்தது கிண்டலடலடித்தாவது வந்திருக்கிறோம். இன்றைக்கும், "அவள் என்றைக்கடா பேசினாள்" என கேட்பதாக அது நீள்கிறது. "சமயக்காரர்களிம்" நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். நமக்காக நாம் தான் கலகக் குரல் எழுப்ப வேண்டும். அவள் என்றைக்கும் பேச மாட்டாள்.

மேலே சொன்ன குறள்:

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்


மழித்தல் = முகம் தலை சிரைத்தல்
நீட்டல் = முகம் தலை எங்கும் முடி நீட்டலாக வளர்த்தல்

அப்படியே புரியும் இன்னொரு அட்டகாசக் குறள்.

--------------------------------

கட்டுரையைத் தமிழாசிரியர்கள் தாண்டி மற்றவர்களும் படிக்கறமாதிரி கொஞ்சம் மொழிநடையை மாற்றி எழுதித் தா என "அன்போடு" வந்த கட்டளையின் படி கொஞ்சம் மாற்றிய நடையில் இதே கட்டுரை இங்கே



Wednesday, May 31, 2023

காசு சேர்த்து வைக்கும் இடம் தெரியும். அறத்தை சேர்க்கும் இடம் எது?

 

உலகில் நாம் காட்டுயிர்களாக அலைந்து திரிந்த போது இருந்து, நாகரிகமடைந்து முன்னேற்றப் பாதையில் நடைபோடத் துவங்கி, இன்று வரை வெல்ல முடியா சிக்கல் - பசி.

இன்றைக்கு அறிவியலின் துணை கொண்டு பெரும்பாலும் பசித்தீயை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம். இருப்பினும் ஆதரவற்ற சிறுவர், முதியோர், உடல் நலிந்தோர் போன்ற சிலர் பசியில் வாடும் சூழல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்கிறது.

அரசுகளும் தொண்டு நிறுவனங்களும் இயன்ற வழிகளில் எல்லாம் பசித்த மனிதன் எங்கும் இருக்கக் கூடாது என பாடுபடுகிறார்கள். அவர்களைக் காட்டிலும் தனி மனிதர்கள் சிலரின் அறமும் கொடையுள்ளமும் பல நேரங்களில் கண்கலங்க வைத்து விடுகிறது. சமீபத்தில் நண்பன் ஒருவன் தன் கைப்பொருளோடு தனக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகளை காசாக்கி பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளுக்கு நல்லுணவாகப் பரிசளித்தான். செய்தியைக் கேட்டவுடன் மனம் இளகி கண்கள் பனித்தன. இருக்கட்டும். உலகம் இயங்குவது நல்லோர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழையாலேயே. வாழ்க ஈரமனம் கொண்ட நல்லோர்.

நம் பெருங்கருணையாளரான ஐயன் வள்ளுவரும் பசி கொண்ட மனிதனைக் கண்டு கலங்கி பல இடங்களில் எழுதுகிறார். அவன் துயர் நீக்க பொருள் கொண்டவரை உதவச் சொல்கிறார். வெறுமனே, "காசு வெச்சிருக்க இல்ல, குடுடா அவனுக்கு" எனச் சொல்லவில்லை. பொருள் கொண்டவனின் அற உள்ளத்தைத் தூண்டி, மகிழ்வோடு உதவிடும் எண்ணத்தை விதைக்கிறார்.

பசி எனும் பெருந்தீயை எல்லாவற்றையும் அழிக்கும் ஒன்றாக உருவகப்படுத்துகிறார். அந்த அழித்துவிடும் பசி கொண்ட மனிதனின் பசி தீர்ந்த நிறைவே பொருள் கொண்டவன் அறத்தை சேர்த்து வைக்கும் சேமிப்புக் கிடங்கு என்கிறார். எல்லாம் ஏழு சொற்களில்.

ஐயனே, உம்மைக் கண்டதில்லை; உம் பெயரை நாங்கள் அறிந்ததில்லை; உருவத்தில் உயரமானவரா குள்ளமானவரா தெரியாது;

ஆனால் உம் அறிவின் உயரம் அறிவோம்; தமிழை அழகுற பயன்படுத்தும் ஆற்றல் அறிவோம்; அடுத்த மனிதன் மீதான உம் கருணையுள்ளம் காண்கிறோம். வாழிய நின் புகழ்.

இல்லறத்தில் உள்ளோரிடம், இல்லார்க்கு உதவிடச் சொல்லி "ஈகை" எனும் தலைப்பில் 10 குறட்பாக்கள் எழுதியிருக்கிறார். அதில் ஒன்று:

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

அற்றார் = இல்லாதவர்கள்
அழிபசி = அழிக்கும் பசி
பெற்றான் பொருள் = பொருள் பெற்றிருப்பவன் = வசதி இருக்கிறவன்
வைப்புழி = வைக்குமிடம்

பொருள் கொண்ட ஒருவன், இல்லாதவர்களின் அழித்து விடும் பசியை தீர்த்ததில் (கிடைக்கும் நிறைவே) (அறத்தை) சேர்த்து வைக்கும் சேமிப்புக் கிடங்கு.

"வைக்கும் இடம்" என்று மட்டும் சொல்லி நிறுத்திவிடுகிறார். அறத்துப்பாலில், ஈகை அதிகாரத்தில் இல்லறவாசிக்குச் சொல்லும் அறிவுரை வேறு என்னவாக இருக்க முடியும்? பசித்தவனின் இடர் நீங்கும் போது கிடைக்கும் நிறைவில் தங்கத்தையா சேமிக்க முடியும்? அறத்தைத்தான் சொல்லாது சொல்கிறார்.

நலிந்தோர்க்கு கொடுப்பதற்கே செல்வம். அதிலும், பசிப்பிணியைப் போக்க இயன்ற போதெல்லாம் உதவிடுவோம். தழைக்கட்டும் மானுடம்.

----------

குறிப்பு:
இதனுடன் உள்ள படங்கள் மேற்சொன்ன நண்பன் ஆதரவு குன்றிய நிலையில் உள்ள குழந்தைகளுக்கு நல்லுணவு கொடுத்து மகிழ்வித்த போது எடுத்தவை.



 



 

Saturday, April 1, 2023

பெண் விடுதலையை யாரும் கொண்டு வந்து கொடுக்க மாட்டார்கள்.

 

உலகில் எங்கு பிறந்திருந்தாலும் என்ன மொழி பேசினாலும் புரட்சியாளர்கள் சிந்தனை ஒன்று போலவேதான் இருந்திருக்கிறது. உடன் வாழும் மனிதனை அறத்துடன், சமமான நீதியுடன் நடத்த வேண்டும் என்ற எண்ணம், அதை நோக்கிய அவர்களது செயல்பாடுகள் இருந்திருக்கின்றன. தனக்குரியதைப் பெற, தாங்களே முனைய வேண்டும் என்கிறார்கள்.

ஆப்பிரிக்க-அமெரிக்கப் புரட்சியாளர் மால்கம்-X அவர்களின் தன்-வரலாற்றைப் படிக்கவும் ஓரிரு நேர்காணல்களையும் பார்க்கும் வாய்ப்பும் அமைந்தது. சினம் கொண்ட, கூர்மையான வாதங்கள். சட்டென சுடும் கேள்விகள். மனிதர், தன் இனத்தின் மீதான அடக்குமுறைகளை, ஏய்ப்புகளை சொற்களின் வழியே கேட்போர் முகத்தில் அறையும் வண்ணம் சுடுகிறார்.

தன் இனத்தவரின் விடுதலை மற்றவர்கள் மூலம் கிட்டாது, அவர்களே தான் போராடிப் பெற வேண்டும் என்கிறார். வெகு சூடாக.

தமிழ்நாட்டின் பெரியாரும் இதையே தனக்கேயுரிய எளிய மொழியில் பெண் விடுதலை பற்றி பேசும்போது சொல்கிறார். "எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? நரிகளால் கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? அப்படித்தான் பெண் விடுதலையும்." என்கிறார்.

பெண் விடுதலை, பெண் உரிமைக்கான உந்துதல் பெண்களிடம் இருந்தே வர வேண்டும், ஆண்கள் கொண்டு வந்து கொடுப்பார்கள் எனக் காத்திருந்தால் ஏமாற்றமே எஞ்சும் என்பதுதான் அவர் சொல்லவருவது.

இப்போது ஐயன் வள்ளுவருக்கு வருவோம். இவர், 20-22 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிந்தனையாளர். தான் வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் மிக உயரத்துக்குச் சிந்தித்த அறிவாளி. பசித்தவனைக் கண்டு கசிந்த கருணையாளர். இரந்தே உயிர் வாழும் சூழல் ஏற்பட்டால், அச்சூழலை ஏற்படுத்தியவனும் அங்ஙனமே கெட்டு அழியட்டும் என குரல் எழுப்பும் கலகக்காரர். இன்றிருந்தால் மேற்சொன்ன புரட்சியாளர்களைக் காட்டிலும் கூடுதலாக, காட்டமாக, அழகாகவும் பேசியிருப்பார்.

பெண் பற்றிய கீழ்காணும் தன் குறளுக்கு என்ன விளக்கம் சொல்லியிருப்பார்?

அவரது குறளுக்கு அவரே நேரில் வந்து பொருள் சொன்னால் ஒழிய எவர் புரிதலும் தவறல்ல.

கண்டிப்பாக‌, பெண்கள் தன் வலிமையை உணர்ந்து தங்களுக்கு வேண்டியதை யாருக்காவும் காத்திராமல் தாங்களே பெறவேண்டும் என்று தான் சொல்லியிருப்பார் நம் அன்புக்குரிய புரட்சியாளர் வள்ளுவர்.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்


தற்காத்து = தன்னைக் காத்து
தற்கொண்டா(னை) = தன்னை அன்பில் கொண்டானை = தன் அன்புக்குரிய வாழ்க்கைத் துணையை.
பேணி = நலன் போற்றி
தகைசான்ற = பெருமைக்கு உரிய
சொல் காத்து = புகழைக் காத்து (பெற்று) - "சொல்" என்பதற்கு புகழ் என்ற பொருள் இங்கு.
சோர்வு இலாள் = அயற்சி அடையாள் (Never giving up attitude)

பெண் என்பவள், தன்னைக் காத்து, தன் அன்புக்குரிய கொண்டவனின் (வாழ்க்கைத் துணை) நலன் போற்றி, "தகைசான்ற சொல் காத்து" - பெருமைக்குரியவாறு நற்பெயர் பெற்று, என்றும் சோர்வின்றி இருப்பவள்.

மற்றவர்களுக்காக காத்திராமல், நீங்களாகவே உங்களைக் காத்துக் கொண்டு, உங்கள் காதல் துணைவனையும் பேணி, எல்லோரிடமும் பெருமைக்குரியவாறு நல்ல பெயர் வாங்கி, என்றும் எதற்கும் சோர்ந்து போகாது இருங்கள் (முன்னேறுங்கள்) பெண்களே என்று இக்குறளை பெண்கள் தின வாழ்த்தாகச் சொல்லியிருப்பார் ஐயன்.

அவருடன் நாமும் நம் பெண்களுக்கு பெண்கள் தின வாழ்த்தோடு, "உங்கள் முன்னேற்றம் உங்களால்தான் முடியும் - யாருக்காவும் காத்திராதீர்" என்ற பரிந்துரையும் சொல்வோம்.

வாழ்த்துக்கள், பெண்களே!