Saturday, June 24, 2017

நமக்கு எதுக்கு 'ப்ரச்ன' ? (ஞாயிறு போற்றுதும்)

சில நாட்களுக்கு முன் 'அறிவோம் நம் மொழியை' என்னும் பகுதியில் ஒரு நாளிதழில் வந்த கட்டுரையைத் தொடர்ந்து:

"இந்தப் 'ப்ரச்ன'யை எப்படித் தீர்ப்பது?" என்பது தான் அதன் தலைப்பு (https://goo.gl/BdMVjI)

"ப்ரச்ன" எனும் இந்த சமற்கிருதச் சொல்லைத் தமிழாக்குவதற்கு முன், அந்தச் சொல் தமிழுக்கு உண்மையிலேயே தேவையா என்பதை பார்ப்போம்.

----------------------------------
ஒரு மொழியில் ஒவ்வொரு செயலின்/பொருளின் மெல்லிய வேறுபாட்டையும் குறிக்க சொற்கள் இருப்பது அதன் அழகு, சிறப்பு.
சரியான சொற்களைப் பயன்படுத்துவது குழப்பமில்லாமல் செய்தியைத் தெரிவிக்கும். இல்லையா?
இப்போ "பிரச்சினை"க்கு வருவோம். 
எந்த ஒரு எதிர்மறை நிகழ்வைச் சொல்லவும் "பிரச்சினை" என்கிறோம். யோசிச்சு பாருங்க, பொருத்தமான சொற்கள் தமிழில் பல இருந்தும் அவற்றைப் பயன்படுத்தாது "பிரச்சினை"யைத்தான் எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறோம்.

நம்மிடம் ஏற்கனவே இருக்கும் எதிர்மறைச் சொற்கள் சில:
சிக்கல், தகராறு, மனவருத்தம், சண்டை, கோளாறு, பற்றாக்குறை, குறைபாடு, இடைஞ்சல், வம்பு, குழப்பம், குளறுபடி, தவறு, பழுது...
மேலே சொன்ன எல்லாச் சொல்லுக்கும் இப்போது நமக்கு புழக்கத்தில் உள்ளது ஒரே "பிரச்சினை" தான்.
கோபுரத்துக்கெல்லாம் அடி அடின்னு சுண்ணாம்பு அடிச்சு வைக்கிறோமே அது போல. எல்லாமே பிரச்சினை தான். வண்ணப் பூச்சே கிடையாது. வெறும் வெள்ளையடித்தல் மட்டுமே.

"அங்கே ஏதோ பிரச்சினை". அவ்வளவுதான்.
அது சண்டையாகவும் இருக்கலாம், பற்றாக்குறையாகவும் இருக்கலாம், குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம், என்ன வேணா இருக்கலாம். ஆனால் ஒரே "பிரச்சினை" தான். அது என்னன்னு சொல்ல கூடுதல் விளக்கம் தேவைப்படும்.

அது பாட்டுக்கு இருந்துட்டு போகட்டுமே இதுல உங்களுக்கு என்னங்க பிரச்சினை-ன்னு யாரவது கேட்டால், ​எங்களுக்கு எப்பவுமே பிரச்சினை வேண்டாங்க, இது என் ஆதங்கம்-ன்னு சொல்லலாம். :)

Vocabulary-யை சரியாக பயன்படுத்த வேண்டும். அதுவே மொழிக்கும் பேசுபவருக்கும் அழகு & பலம்.

வேறு சில "பிரச்சினை" சொற்களை பட்டியலிடுங்கள்.

Saturday, June 10, 2017

வல்லினம் @ இருபெயரொட்டுப் பண்புத்தொகை (ஞாயிறு போற்றுதும்)

அடிக்கடி கண்ணில் படும் ஒரு ஒற்றுப் பிழையை குறித்து இன்றைய குறிப்பு.

தமிழில் எங்கு வலி மிகும்/மிகாது என்று வகுக்க விதிகள் இருப்பது தெரியும். அதில் ஒன்று இது.
இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்.

இரண்டு தனிப் பெயர்கள் அடுத்தடுத்து வரும்போது முதல் சொல் இரண்டாம் சொல்லின் பண்பைக் குறித்தல் இரு பெயரொட்டு பண்புத்தொகை.

இருபெயரொட்டுப் பண்புத்தொகை = இரு பெயர்கள் ஒட்டி வந்து பண்புத்தொகை ஆதல்.
அவ்வளவுதான்.

அப்படி இரண்டு பெயர்ச் சொற்கள்* அடுத்தடுத்து வரும் போது நடுவுல பசை (ஒட்டு/ஒற்று) போட்டுட வேண்டியதுதான்.
*இரண்டாவது சொல் வல்லினத்தில் (க,ச,ட,த,ப,ற) துவங்கினால்.
எ.கா:
தமிழ். சங்கம்.
இரண்டும் தனித்தனி பெயர்ச் சொற்கள். ஒன்றைச் சார்ந்து மற்றோன்று இல்லை. ஆனால் அடுத்தடுத்து வரும்போது முதல் சொல் இரண்டாம் சொல்லின் பண்பைச் சொல்லிவிடுகிறது. அந்த சங்கம் கன்னட/தெலுங்கு சங்கமெல்லாம் இல்லை, அது தமிழ் தொடர்பான சங்கம்-ன்னு அதன் பண்பைச் சொல்லிவிடுகிறது.

இப்போ,
என்ன சங்கம்? தமிழ்ச் சங்கம். 

சொற்களை மாற்றிப் போட்டாலும் விதி அதே.
என்ன தமிழ்? சங்கத் தமிழ்.
சங்கத் தமிழ் மட்டுமில்லை, சென்னைத் தமிழுக்கும் அங்ஙனமே.
சென்னை + தமிழ் = சென்னைத் தமிழ்.

மிக எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள:
எப்போதும் பண்பைச் சொல்கையில் அழுத்திச் சொல்லணும்.
தமிழ் சங்கம் நடத்தும் தமிழ் பள்ளியில் என் செல்ல குட்டி படிக்குது-ன்னு யாரவது "மேலாக" எழுதினா அவர்களை என்ன செய்யணும்ன்னு யோசிச்சு வையுங்க. செய்திடுவோம். :)

மேலும் சில எ.கா:
பட்டு + குட்டி
உயிர் + தோழி/ழன்.
தமிழ் + பள்ளி
வேறு சில சொற்களை முயன்று பாருங்கள்.

Saturday, June 3, 2017

ஞாயிறு போற்றுதும் - முயற்சி

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

இந்த 'முயற்சி' என்ற சொல் தொடர்பாக இன்று ஒரு குறிப்பு.

I am trying என்பதை எப்படிச் சொல்வோம்?
முயல்கிறேன் என்பது சரியான பயன்பாடு. முயற்சிக்கிறேன் என்பது? தப்புதாங்க.

பயிற்சி என்பதை சொல்லிப் பாருங்கள். செய்து கொண்டிருக்கும் பயிற்சியை "பயிற்சி செய்கிறேன்" என்றோ, பயில்கிறேன் என்றோதான் சொல்கிறோம். பயிற்சிக்கிறேன், பயிற்சித்தான் என்றெல்லாம் கொத்து பரோட்டா போடுவதில்லை. ஆனால் பாவம், முயற்சி மட்டும் மாட்டிக்கொண்டுவிட்டது.

சரி,
முயற்சிக்கிறேன், முயற்சித்தான்/ள்/ர் எல்லாம் தப்புன்னு ஆகிடுச்சு.
ஆனால், யோசிச்சிச்சு பார்த்தால் இந்த மாதிரி சொற்களை நாம எல்லா நேரங்களிலும் தவறாகப் பயன்படுத்துவதில்லை.
"பண்ணி" போட்டு ஒரு மாதிரி சமாளிச்சுடுறோம்.
முயற்சி பண்ணினேன் / முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் /முயற்சி பண்ணுவேன்.
இது ஒரு மாதிரி தவறில்லாத பயன்பாடு. பண்ணியை தொறத்திட்டு "செய்" என்ற கட்டளைச் சொல்லை பயன்படுத்தினால் இன்னும் கொஞ்சம் சரியாகிடும். முழுமையாக இல்லைன்னாலும் just pass-ஆவது செய்திடும்.
முயற்சி செய்தேன் / முயற்சி செய்கிறேன் / முயற்சி செய்வேன்.
ஏன் just-pass என்றால், முயற்சி என்பது பெயர்ச்சொல். முயல் என்பதே வினைச்சொல். ஆனாலும் "முயற்சி செய்வதில்" இலக்கணப் பிழை இல்லாததால் கருணை-பாஸ்.

எழுதும் போது இப்படிச்
​சரியாக ​
எழுதலாம்:
முயன்றேன் / முயல்கிறேன் / முயல்வேன்

கவனிக்க: பெயர்ச்சொல்லில் காலம் அறிய முடியாது. ஆனால் வினைச் சொல்லில் காலம் அறியலாம். அந்த வினை முற்றிற்றா இல்லையா என்பதை அச்சொல் தெரிவிக்கும். (காலமொடு வரூஉம் வினைச்சொல் - (தொ.கா))

சொற்சிக்கனம் கூடுதல் சலுகை/நன்மை.

"பண்ணி" suffixed சொற்கள் எல்லாம் இப்படி கழுத்து நெறிக்கப்பட்டுக் கொண்டு இருப்பவையே.

இப்போ என்னென்ன சொற்களை* இப்படி "பண்ணி" வெச்சிருக்கோம்-ன்னு யோசிச்சு பாருங்க.

* இந்த, "திங்க் பண்ணி", "லேட் பண்ணி" எல்லாம் விட்டுடலாம். அதெல்லாம் தெரியாமல் செய்வதில்லை.

Thursday, June 1, 2017

ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு இலக்கணக் குறிப்பு


உள்ளுர்க்காரர் ஒருவர் வாரந்தோறும் ஏதாவது ஒரு சிறு தமிழ் இலக்கணக் குறிப்பினை ஒரு உரையாடல் குழுவிற்காக எழுதி வருகிறார். அதை நம் வலைப் பக்கத்திலும் பதியுங்கள் என்று கேட்டிருக்கிறோம். அடி விழாது என்ற உறுதியின் பேரில் ஒப்புக்கொண்டு இருக்கிறார். நாங்க எல்லாரும் ரெம்ம்ம்ப நல்லவிங்க பயப்பட வேண்டாம்-ன்னு சொல்லியிருக்கோம். முடிஞ்ச அளவு வன்முறையை தவிர்ப்போம். என்ன, சரியா? :)

ஞாயிறுதோறும் ஒரு குறிப்பினை பார்ப்பதால் (போற்றுவதால்), இளங்கோ அடிகளிடம் இருந்து "ஞாயிறு போற்றுதும்"-ங்கறதை கடன் வாங்கி அந்தத் தலைப்பில் எழுதுகிறார். அதே தலைப்பில் நம் வலைப் பக்கத்திலும் பதியச் சொல்லலாம். படிக்கிறவங்க என்ன கிழமையில படிச்சாலும், புரிஞ்சா சரிதானே?