Monday, September 25, 2017

கொடுந்தமிழ். ​அப்படின்னா?

​செந்தமிழ் தெரியும், பைந்தமிழ் கூட தெரியும், அதென்ன கொடுந்தமிழ்?
கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் சரியான பொருளில் பயன்படுத்தப்பட்டிருந்ததா எனப் பார்த்து விடுவோம்.

Spoiler: அது எதிர்மறைச் (negative) சொல் அல்ல.

இலக்கண விதிகள் வழுவாமல் சொற்கள் அப்படியே இருத்தல் நலமே. ஆனால் மக்கள் பல திசைகளுக்கு பணி நிமித்தமாகவும் வேறு பல காரணங்களுக்காகவும் போய் வரும்போது அந்தந்த வட்டாரங்களின் தன்மைக்கேற்ப தமிழையும் வளைத்து பேசுவர். அது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, தவிர்க்கத் தேவை இல்லாததும் கூட.

மேலே  உள்ள பத்தியில் 2 விசைச் சொற்கள் (keywords) உள்ளன. திசை, வளைத்து ஆகியன. வேண்டுமென்றேதான் அவை பயன்படுத்தப்பட்டுள்ளன. எதற்காக என பார்ப்போம்.

தமிழ் பேசப்பட்ட நிலம் செந்தமிழ்-நிலம் (Mainland). அதைச் சுற்றி அமைந்த மற்ற நாடுகளில் இருந்து வந்து போகும் மக்கள் மூலமாக தமிழுக்குள் வரும் சொற்களை திசைச்சொற்கள் என்கிறார் தொல்காப்பியர். அதாவது, ஒரு பொருளைக் குறிக்க வழக்கமான சொல்லைத் தவிர்த்து வேறு புதிய ஒரு சொல்லை பயன்படுத்துவது. எகா: சிறுகுளம் என்பதை கேணி என்று ஆற்காடு பக்கம் சொல்வது.

இப்படி மொழியை வளைத்து, ஒரு பொருளை வேறு ஒரு திசையில் இருந்து வந்த சொல்லின் வழியாக குறிக்கும் போது அந்தச் சொல் "திசைச்சொல்".

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினுந
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (தொ.கா)


ஆச்சா..
இப்போ, ஏன் "கொடுந்தமிழ்"?
கொடு என்றால் வளைதல்.

எகா:
கொடுவாள் (வளைந்த வாள்), கொடுங்கோல் (வளைந்த அரசு - அறத்தில் இருந்து வளைந்த அரசு), கொடுக்காப்புளி, கொடுக்கு..

அதன்படியே, வளைந்த தமிழ் = கொடுந்தமிழ்.

​நன்னூல் வரை திசைச்சொல் என்றே சொல்லி வந்திருக்கிறார்கள். நன்னூலுக்கு உரை எழுதும்போது தான் "வளைந்திருக்கிறது".​

​இப்போது அதையே நாம் வட்டார வழக்கு என்று சொல்கிறோம்.​

​வீட்டுப்பாடம்:
உங்களுக்கு தெரிந்த கொடுந்தமிழ்/திசைச்சொல்/வட்டார வழக்குகளை குறிப்பிடுங்கள்.​

Monday, September 18, 2017

​தமிழின் மிக நீண்ட சொல்


ஆங்கிலத்தில் மிகப் பெரிய (நீண்ட) சொல் எது எனக் கேட்டால் நம்மில் சிலர் கூகுளை கேட்காமலேகூட சொன்னாலும் சொல்லி விடுவோம்.

தமிழில்?

தமிழின் எளிமை அப்படி நீண்ட தனிச் சொற்களை ஊக்குவிப்பதில்லை. எது "சொல்" என்பதற்கே நாம் தெளிவான வரைமுறை வைத்திருக்கிறோம்.
பெயர், வினை. அவ்வளவுதான் வகைகள்.
இடைச்சொல், உரிச்சொல் எல்லாம் பெயர், வினைச் சொற்களைச் சார்ந்தது.

இதிலும்
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொ.கா) 
என்ற கட்டுப்பாடு வேறு ​உண்டு.

இப்படி அமையும் சொற்களைப் பிரிக்க (பகுக்க) முடிந்தால் அவை தனிச் சொற்கள் அல்ல. கூட்டுச் சொற்கள்.

அதன் Grammatical terms: பகுபதம், பகாபதம்.
பகும் (பிரியும்) சொற்கள் (பதம்) - பகுபதம்.
பகாச் சொற்கள் - பகாபதம்.

எகா:
படித்தான் = படி + ஆன். இது பகுபதம் (பிரியும் சொல்).
படி என்பதை மேலும் பகுக்க முடியாது​. எனவே பகாபதம். (பிரியாச் சொல்)

ஆச்சா?
இப்போ வருது நன்னூல் உதவி:
பகாப்பத மேழும் பகுபத மொன்பதும் 
எழுத்தீ றாகத் தொடரு மென்ப

அதன்படி உயர் அளவாக,
பகாபதம்: 7 எழுத்துக்கள்.
பகுபதம் : 9 எழுத்துக்கள்.

ஆக, technically உயர்ந்த அளவாக 9 எழுத்துக்களே இந்தச் சொல்லிலும் வர முடியும். இதைக் காட்டிலும் நீண்ட சொற்கள் எல்லாம் பல சொற்களை நாமாக சேர்த்து எழுதியதாகத்தான் இருக்கும் என்கிறார்கள். மறுப்போரும் உண்டு. ஆனால் நன்னூல் சொல்வது மேலே குறிப்பிட்டது போலத்தான்.

எதற்காக இவ்வளவு கட்டுப்பாடுகள்?
புதிய சொற்களை ஆக்கும் போது அவை பயனுள்ளதாக மட்டுமின்றி எளிமையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே.

Saturday, July 15, 2017

ஒரு சக்களத்திச் சண்டை


என்னமோ ஏதோன்னு பதறிட வேண்டாம். இது தப்பான தொடர்பு பற்றியதல்ல. ​தமிழ் இலக்கணம் தொடர்பானது.

தமிழில் இருபிறப்பி என்று ஒரு சொற்பிரிவு (category) உண்டு. இரு வேறு மொழிகளின் பகுதிகள் இணைந்து புதியதாக ஒரு தமிழ்ச் சொல்லைத் தருவது.

இருபிறப்பி =  Hybrid.
இதுதான் இன்றைய குறிப்பிற்க்கான அடிப்படை.

சக்களத்தி தப்புன்னு தெரியும், சக்களத்தி -ன்னு சொல்வதும் தப்புங்கிறாங்க.
சக + களத்தி = சக்களத்தி.
களத்தி  = துணைவி.
ஆக, இன்னொரு களத்தி = சக களத்தி = சக்களத்தி.

அப்படியானால் அவரவர் தங்களின் "திருமதி மட்டும்"-ன்னு இருந்துட்டா தப்பில்லை; இல்லையா?
Socially சரி. ஆனால் இலக்கணப் படி "திருமதி"-யும் தப்புங்கறாங்க.

ஸ்ரீமதி என்பதன் நேரடி மொழிபெயர்ப்பாம் அது. "அப்படியே" பெயர்த்து எடுத்துக்கிட்டு வந்துட்டாங்க போல.
ஸ்ரீ + மதீ => திரு + மதி. ஏற்கனவே நம்மிடம் மதி = அறிவு* என்று இருப்பதால் அப்படியே விட்டுடாங்களோ என்னவோ.
*(மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் - திருக்குறள்)

இருப்பினும், மனைவி மதி நிறைந்தவராக இருத்தல் மகிழ்வே.

அப்போ எப்படி மணமான பெண்ணை மதிப்போடு குறிப்பிட?
திருவாட்டி என்பதே சரியாம்.

சக்களத்தியை?
எங்கையர்.

ஒரு பாட்டுல, பாணன் கிட்ட புலப்புகிறாள் ஒரு தலைவி.
"அறிவு கெட்டுப் போய் இங்க ஏன்டா வந்த, அவன் அங்கன எங்கைகிட்ட இருப்பான் போ"-ங்கற மாதிரி வரும்.

நீதானறிவயர்ந் தெம்மில்லு ளென்செய்ய வந்தாய்
நெறியதுகா ணெங்கைய ரிற்கு (ஐந்திணையைம்பது)


இப்போ இருபிறப்பிகள் என்னென்ன புழங்கறோம் யோசிச்சு பாருங்க.
தமிழ் + <பிற மொழி >

=====================

இச்சொல்லை வைத்து ஒரு நாடகக் காட்சியை கற்பனை செய்து பாருங்கள்:

-------------
காட்சி 1:
அவள் : எங்கய்யா, வீட்டுக்கா போயிட்டு வர?
அவன்: எங்கையா வீட்டுக்கு போயிட்டு வரேன்.
அவள்: எங்கே போயிட்டு வர???
அவன்: அதான் சொல்றேனே. எங்கையா வீட்டுக்கு.
அவள்: எடு அந்த தொ.. கட்டையை..

அவன் ஓட, அவள் துரத்த, காட்சி முடிகிறது.
-------------

:-)

Saturday, July 8, 2017

இரண்டு மெய் எழுத்துக்கள் அடுத்தடுத்து வருமா, எப்படி? (ஞா.போ)


ஏதேதோ பேசிக்கொண்டிருக்கும் போது மேலே உள்ள கேள்வி வந்தது.

மகிழ்ச்சி. பார்த்திடுவோம்.
 
தலைப்பிற்குள் போகும் முன் இன்னொரு குறிப்பு:
அமெரிக்கச் சாலைகளின் 1 U turn = 2 left turns என்று தனித்தனியாகக் கருதும் விதியைப் போல தமிழில் உயிர்மெய் எழுத்துக்கள் எல்லாம் மெய் + உயிர் என்று தனித்தனியாகவே கருதப்படுகிறது. அசை பிரிக்க மெனக்கெட வேண்டியதில்லை.
 
எ.கா:
அம்மா = அ + ம் + ம் + ஆ

இப்படி, இரு மெய் எழுத்துக்கள் அடுத்தடுத்து வருவதை வெகு இயல்பாக பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.

இதுபோல வரும் மெய்யெழுத்து பயன்பாட்டிற்கு ஒரு கலைச்சொல் (Technical term) இருக்கிறது.

மெய் மயக்கம்.

அதில் உட்பிரிவுகள் உண்டு. என்னென்ன எழுத்துக்கள் எதனை தொடர்ந்து வர வேண்டும் என்பதற்கெல்லாம் விதிகள் உண்டு. தமிழ் கற்போரை மிரட்ட அல்ல; கவிதைகளின் (பாடல்/பா/செய்யுள்) ஓசை இனிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த விதிகள்.

மெய்ம்மயக்கத்தில் ஒரு வகை உடனிலை.
அம்மா = ம் என்ற மெய், தன்னுடன் இன்னொரு முறை தானே வரும் நிலை.
உடன் + நிலை.

அம்மூ வாறும் வழங்கியன் மருங்கின்
மெய்ம்மயக் குடனிலை தெரியுங் காலை (தொ.கா)
இது போல் எளிய வகைகளும் அதனைக் குறிக்க விதிகளும் உள்ளன.

இப்போதைக்கு முதல் வரியில் கேட்ட கேள்விக்கு பதில்:
மெய் எழுத்துக்கள் அடுத்தடுத்து வரும். அதற்கு பெயர் மெய்மயக்கம் (மெய்ம்மயக்கம் என்றும் சொல்வதுண்டு).

மெய் எழுத்தைத் தொடர்ந்து உயிர்மெய்யாக இல்லாது straight-ஆக இன்னொரு மெய் எழுத்து வருவது ஈரொற்று மயக்கம்.
பெரிசா ஒன்னும் இல்லை.
இரண்டு ஒற்று மயக்கம் = ஈரொற்று மயக்கம். அவ்வளவுதான்.

மூன்று மெய்கள் கூட மயங்கி (சேர்ந்து) வரும்: வாழ்த்து = வா + ழ் + த் + த் + உ

Btw, மயக்கம் என்றால் சேர்ந்து வருதல். தலை சுற்றல் மட்டுமில்லை.
தமிழ் படிக்கையில் தலைசுற்றல் இருக்கக் கூடாது. :)

என் பங்குக்கு இரு சொற்களை இரண்டாம் வரியில் சொல்லி இருக்கிறேன். (ழ்ச், ர்த்)
படிப்பவர்களும் உங்கள் பங்குக்கு முயன்று பாருங்கள்.

Saturday, June 24, 2017

நமக்கு எதுக்கு 'ப்ரச்ன' ? (ஞாயிறு போற்றுதும்)

சில நாட்களுக்கு முன் 'அறிவோம் நம் மொழியை' என்னும் பகுதியில் ஒரு நாளிதழில் வந்த கட்டுரையைத் தொடர்ந்து:

"இந்தப் 'ப்ரச்ன'யை எப்படித் தீர்ப்பது?" என்பது தான் அதன் தலைப்பு (https://goo.gl/BdMVjI)

"ப்ரச்ன" எனும் இந்த சமற்கிருதச் சொல்லைத் தமிழாக்குவதற்கு முன், அந்தச் சொல் தமிழுக்கு உண்மையிலேயே தேவையா என்பதை பார்ப்போம்.

----------------------------------
ஒரு மொழியில் ஒவ்வொரு செயலின்/பொருளின் மெல்லிய வேறுபாட்டையும் குறிக்க சொற்கள் இருப்பது அதன் அழகு, சிறப்பு.
சரியான சொற்களைப் பயன்படுத்துவது குழப்பமில்லாமல் செய்தியைத் தெரிவிக்கும். இல்லையா?
இப்போ "பிரச்சினை"க்கு வருவோம். 
எந்த ஒரு எதிர்மறை நிகழ்வைச் சொல்லவும் "பிரச்சினை" என்கிறோம். யோசிச்சு பாருங்க, பொருத்தமான சொற்கள் தமிழில் பல இருந்தும் அவற்றைப் பயன்படுத்தாது "பிரச்சினை"யைத்தான் எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறோம்.

நம்மிடம் ஏற்கனவே இருக்கும் எதிர்மறைச் சொற்கள் சில:
சிக்கல், தகராறு, மனவருத்தம், சண்டை, கோளாறு, பற்றாக்குறை, குறைபாடு, இடைஞ்சல், வம்பு, குழப்பம், குளறுபடி, தவறு, பழுது...
மேலே சொன்ன எல்லாச் சொல்லுக்கும் இப்போது நமக்கு புழக்கத்தில் உள்ளது ஒரே "பிரச்சினை" தான்.
கோபுரத்துக்கெல்லாம் அடி அடின்னு சுண்ணாம்பு அடிச்சு வைக்கிறோமே அது போல. எல்லாமே பிரச்சினை தான். வண்ணப் பூச்சே கிடையாது. வெறும் வெள்ளையடித்தல் மட்டுமே.

"அங்கே ஏதோ பிரச்சினை". அவ்வளவுதான்.
அது சண்டையாகவும் இருக்கலாம், பற்றாக்குறையாகவும் இருக்கலாம், குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம், என்ன வேணா இருக்கலாம். ஆனால் ஒரே "பிரச்சினை" தான். அது என்னன்னு சொல்ல கூடுதல் விளக்கம் தேவைப்படும்.

அது பாட்டுக்கு இருந்துட்டு போகட்டுமே இதுல உங்களுக்கு என்னங்க பிரச்சினை-ன்னு யாரவது கேட்டால், ​எங்களுக்கு எப்பவுமே பிரச்சினை வேண்டாங்க, இது என் ஆதங்கம்-ன்னு சொல்லலாம். :)

Vocabulary-யை சரியாக பயன்படுத்த வேண்டும். அதுவே மொழிக்கும் பேசுபவருக்கும் அழகு & பலம்.

வேறு சில "பிரச்சினை" சொற்களை பட்டியலிடுங்கள்.

Saturday, June 10, 2017

வல்லினம் @ இருபெயரொட்டுப் பண்புத்தொகை (ஞாயிறு போற்றுதும்)

அடிக்கடி கண்ணில் படும் ஒரு ஒற்றுப் பிழையை குறித்து இன்றைய குறிப்பு.

தமிழில் எங்கு வலி மிகும்/மிகாது என்று வகுக்க விதிகள் இருப்பது தெரியும். அதில் ஒன்று இது.
இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்.

இரண்டு தனிப் பெயர்கள் அடுத்தடுத்து வரும்போது முதல் சொல் இரண்டாம் சொல்லின் பண்பைக் குறித்தல் இரு பெயரொட்டு பண்புத்தொகை.

இருபெயரொட்டுப் பண்புத்தொகை = இரு பெயர்கள் ஒட்டி வந்து பண்புத்தொகை ஆதல்.
அவ்வளவுதான்.

அப்படி இரண்டு பெயர்ச் சொற்கள்* அடுத்தடுத்து வரும் போது நடுவுல பசை (ஒட்டு/ஒற்று) போட்டுட வேண்டியதுதான்.
*இரண்டாவது சொல் வல்லினத்தில் (க,ச,ட,த,ப,ற) துவங்கினால்.
எ.கா:
தமிழ். சங்கம்.
இரண்டும் தனித்தனி பெயர்ச் சொற்கள். ஒன்றைச் சார்ந்து மற்றோன்று இல்லை. ஆனால் அடுத்தடுத்து வரும்போது முதல் சொல் இரண்டாம் சொல்லின் பண்பைச் சொல்லிவிடுகிறது. அந்த சங்கம் கன்னட/தெலுங்கு சங்கமெல்லாம் இல்லை, அது தமிழ் தொடர்பான சங்கம்-ன்னு அதன் பண்பைச் சொல்லிவிடுகிறது.

இப்போ,
என்ன சங்கம்? தமிழ்ச் சங்கம். 

சொற்களை மாற்றிப் போட்டாலும் விதி அதே.
என்ன தமிழ்? சங்கத் தமிழ்.
சங்கத் தமிழ் மட்டுமில்லை, சென்னைத் தமிழுக்கும் அங்ஙனமே.
சென்னை + தமிழ் = சென்னைத் தமிழ்.

மிக எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள:
எப்போதும் பண்பைச் சொல்கையில் அழுத்திச் சொல்லணும்.
தமிழ் சங்கம் நடத்தும் தமிழ் பள்ளியில் என் செல்ல குட்டி படிக்குது-ன்னு யாரவது "மேலாக" எழுதினா அவர்களை என்ன செய்யணும்ன்னு யோசிச்சு வையுங்க. செய்திடுவோம். :)

மேலும் சில எ.கா:
பட்டு + குட்டி
உயிர் + தோழி/ழன்.
தமிழ் + பள்ளி
வேறு சில சொற்களை முயன்று பாருங்கள்.

Saturday, June 3, 2017

ஞாயிறு போற்றுதும் - முயற்சி

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

இந்த 'முயற்சி' என்ற சொல் தொடர்பாக இன்று ஒரு குறிப்பு.

I am trying என்பதை எப்படிச் சொல்வோம்?
முயல்கிறேன் என்பது சரியான பயன்பாடு. முயற்சிக்கிறேன் என்பது? தப்புதாங்க.

பயிற்சி என்பதை சொல்லிப் பாருங்கள். செய்து கொண்டிருக்கும் பயிற்சியை "பயிற்சி செய்கிறேன்" என்றோ, பயில்கிறேன் என்றோதான் சொல்கிறோம். பயிற்சிக்கிறேன், பயிற்சித்தான் என்றெல்லாம் கொத்து பரோட்டா போடுவதில்லை. ஆனால் பாவம், முயற்சி மட்டும் மாட்டிக்கொண்டுவிட்டது.

சரி,
முயற்சிக்கிறேன், முயற்சித்தான்/ள்/ர் எல்லாம் தப்புன்னு ஆகிடுச்சு.
ஆனால், யோசிச்சிச்சு பார்த்தால் இந்த மாதிரி சொற்களை நாம எல்லா நேரங்களிலும் தவறாகப் பயன்படுத்துவதில்லை.
"பண்ணி" போட்டு ஒரு மாதிரி சமாளிச்சுடுறோம்.
முயற்சி பண்ணினேன் / முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் /முயற்சி பண்ணுவேன்.
இது ஒரு மாதிரி தவறில்லாத பயன்பாடு. பண்ணியை தொறத்திட்டு "செய்" என்ற கட்டளைச் சொல்லை பயன்படுத்தினால் இன்னும் கொஞ்சம் சரியாகிடும். முழுமையாக இல்லைன்னாலும் just pass-ஆவது செய்திடும்.
முயற்சி செய்தேன் / முயற்சி செய்கிறேன் / முயற்சி செய்வேன்.
ஏன் just-pass என்றால், முயற்சி என்பது பெயர்ச்சொல். முயல் என்பதே வினைச்சொல். ஆனாலும் "முயற்சி செய்வதில்" இலக்கணப் பிழை இல்லாததால் கருணை-பாஸ்.

எழுதும் போது இப்படிச்
​சரியாக ​
எழுதலாம்:
முயன்றேன் / முயல்கிறேன் / முயல்வேன்

கவனிக்க: பெயர்ச்சொல்லில் காலம் அறிய முடியாது. ஆனால் வினைச் சொல்லில் காலம் அறியலாம். அந்த வினை முற்றிற்றா இல்லையா என்பதை அச்சொல் தெரிவிக்கும். (காலமொடு வரூஉம் வினைச்சொல் - (தொ.கா))

சொற்சிக்கனம் கூடுதல் சலுகை/நன்மை.

"பண்ணி" suffixed சொற்கள் எல்லாம் இப்படி கழுத்து நெறிக்கப்பட்டுக் கொண்டு இருப்பவையே.

இப்போ என்னென்ன சொற்களை* இப்படி "பண்ணி" வெச்சிருக்கோம்-ன்னு யோசிச்சு பாருங்க.

* இந்த, "திங்க் பண்ணி", "லேட் பண்ணி" எல்லாம் விட்டுடலாம். அதெல்லாம் தெரியாமல் செய்வதில்லை.

Thursday, June 1, 2017

ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு இலக்கணக் குறிப்பு


உள்ளுர்க்காரர் ஒருவர் வாரந்தோறும் ஏதாவது ஒரு சிறு தமிழ் இலக்கணக் குறிப்பினை ஒரு உரையாடல் குழுவிற்காக எழுதி வருகிறார். அதை நம் வலைப் பக்கத்திலும் பதியுங்கள் என்று கேட்டிருக்கிறோம். அடி விழாது என்ற உறுதியின் பேரில் ஒப்புக்கொண்டு இருக்கிறார். நாங்க எல்லாரும் ரெம்ம்ம்ப நல்லவிங்க பயப்பட வேண்டாம்-ன்னு சொல்லியிருக்கோம். முடிஞ்ச அளவு வன்முறையை தவிர்ப்போம். என்ன, சரியா? :)

ஞாயிறுதோறும் ஒரு குறிப்பினை பார்ப்பதால் (போற்றுவதால்), இளங்கோ அடிகளிடம் இருந்து "ஞாயிறு போற்றுதும்"-ங்கறதை கடன் வாங்கி அந்தத் தலைப்பில் எழுதுகிறார். அதே தலைப்பில் நம் வலைப் பக்கத்திலும் பதியச் சொல்லலாம். படிக்கிறவங்க என்ன கிழமையில படிச்சாலும், புரிஞ்சா சரிதானே?