Wednesday, May 31, 2023

காசு சேர்த்து வைக்கும் இடம் தெரியும். அறத்தை சேர்க்கும் இடம் எது?

 

உலகில் நாம் காட்டுயிர்களாக அலைந்து திரிந்த போது இருந்து, நாகரிகமடைந்து முன்னேற்றப் பாதையில் நடைபோடத் துவங்கி, இன்று வரை வெல்ல முடியா சிக்கல் - பசி.

இன்றைக்கு அறிவியலின் துணை கொண்டு பெரும்பாலும் பசித்தீயை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம். இருப்பினும் ஆதரவற்ற சிறுவர், முதியோர், உடல் நலிந்தோர் போன்ற சிலர் பசியில் வாடும் சூழல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்கிறது.

அரசுகளும் தொண்டு நிறுவனங்களும் இயன்ற வழிகளில் எல்லாம் பசித்த மனிதன் எங்கும் இருக்கக் கூடாது என பாடுபடுகிறார்கள். அவர்களைக் காட்டிலும் தனி மனிதர்கள் சிலரின் அறமும் கொடையுள்ளமும் பல நேரங்களில் கண்கலங்க வைத்து விடுகிறது. சமீபத்தில் நண்பன் ஒருவன் தன் கைப்பொருளோடு தனக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகளை காசாக்கி பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளுக்கு நல்லுணவாகப் பரிசளித்தான். செய்தியைக் கேட்டவுடன் மனம் இளகி கண்கள் பனித்தன. இருக்கட்டும். உலகம் இயங்குவது நல்லோர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழையாலேயே. வாழ்க ஈரமனம் கொண்ட நல்லோர்.

நம் பெருங்கருணையாளரான ஐயன் வள்ளுவரும் பசி கொண்ட மனிதனைக் கண்டு கலங்கி பல இடங்களில் எழுதுகிறார். அவன் துயர் நீக்க பொருள் கொண்டவரை உதவச் சொல்கிறார். வெறுமனே, "காசு வெச்சிருக்க இல்ல, குடுடா அவனுக்கு" எனச் சொல்லவில்லை. பொருள் கொண்டவனின் அற உள்ளத்தைத் தூண்டி, மகிழ்வோடு உதவிடும் எண்ணத்தை விதைக்கிறார்.

பசி எனும் பெருந்தீயை எல்லாவற்றையும் அழிக்கும் ஒன்றாக உருவகப்படுத்துகிறார். அந்த அழித்துவிடும் பசி கொண்ட மனிதனின் பசி தீர்ந்த நிறைவே பொருள் கொண்டவன் அறத்தை சேர்த்து வைக்கும் சேமிப்புக் கிடங்கு என்கிறார். எல்லாம் ஏழு சொற்களில்.

ஐயனே, உம்மைக் கண்டதில்லை; உம் பெயரை நாங்கள் அறிந்ததில்லை; உருவத்தில் உயரமானவரா குள்ளமானவரா தெரியாது;

ஆனால் உம் அறிவின் உயரம் அறிவோம்; தமிழை அழகுற பயன்படுத்தும் ஆற்றல் அறிவோம்; அடுத்த மனிதன் மீதான உம் கருணையுள்ளம் காண்கிறோம். வாழிய நின் புகழ்.

இல்லறத்தில் உள்ளோரிடம், இல்லார்க்கு உதவிடச் சொல்லி "ஈகை" எனும் தலைப்பில் 10 குறட்பாக்கள் எழுதியிருக்கிறார். அதில் ஒன்று:

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

அற்றார் = இல்லாதவர்கள்
அழிபசி = அழிக்கும் பசி
பெற்றான் பொருள் = பொருள் பெற்றிருப்பவன் = வசதி இருக்கிறவன்
வைப்புழி = வைக்குமிடம்

பொருள் கொண்ட ஒருவன், இல்லாதவர்களின் அழித்து விடும் பசியை தீர்த்ததில் (கிடைக்கும் நிறைவே) (அறத்தை) சேர்த்து வைக்கும் சேமிப்புக் கிடங்கு.

"வைக்கும் இடம்" என்று மட்டும் சொல்லி நிறுத்திவிடுகிறார். அறத்துப்பாலில், ஈகை அதிகாரத்தில் இல்லறவாசிக்குச் சொல்லும் அறிவுரை வேறு என்னவாக இருக்க முடியும்? பசித்தவனின் இடர் நீங்கும் போது கிடைக்கும் நிறைவில் தங்கத்தையா சேமிக்க முடியும்? அறத்தைத்தான் சொல்லாது சொல்கிறார்.

நலிந்தோர்க்கு கொடுப்பதற்கே செல்வம். அதிலும், பசிப்பிணியைப் போக்க இயன்ற போதெல்லாம் உதவிடுவோம். தழைக்கட்டும் மானுடம்.

----------

குறிப்பு:
இதனுடன் உள்ள படங்கள் மேற்சொன்ன நண்பன் ஆதரவு குன்றிய நிலையில் உள்ள குழந்தைகளுக்கு நல்லுணவு கொடுத்து மகிழ்வித்த போது எடுத்தவை.



 



 

Saturday, April 1, 2023

பெண் விடுதலையை யாரும் கொண்டு வந்து கொடுக்க மாட்டார்கள்.

 

உலகில் எங்கு பிறந்திருந்தாலும் என்ன மொழி பேசினாலும் புரட்சியாளர்கள் சிந்தனை ஒன்று போலவேதான் இருந்திருக்கிறது. உடன் வாழும் மனிதனை அறத்துடன், சமமான நீதியுடன் நடத்த வேண்டும் என்ற எண்ணம், அதை நோக்கிய அவர்களது செயல்பாடுகள் இருந்திருக்கின்றன. தனக்குரியதைப் பெற, தாங்களே முனைய வேண்டும் என்கிறார்கள்.

ஆப்பிரிக்க-அமெரிக்கப் புரட்சியாளர் மால்கம்-X அவர்களின் தன்-வரலாற்றைப் படிக்கவும் ஓரிரு நேர்காணல்களையும் பார்க்கும் வாய்ப்பும் அமைந்தது. சினம் கொண்ட, கூர்மையான வாதங்கள். சட்டென சுடும் கேள்விகள். மனிதர், தன் இனத்தின் மீதான அடக்குமுறைகளை, ஏய்ப்புகளை சொற்களின் வழியே கேட்போர் முகத்தில் அறையும் வண்ணம் சுடுகிறார்.

தன் இனத்தவரின் விடுதலை மற்றவர்கள் மூலம் கிட்டாது, அவர்களே தான் போராடிப் பெற வேண்டும் என்கிறார். வெகு சூடாக.

தமிழ்நாட்டின் பெரியாரும் இதையே தனக்கேயுரிய எளிய மொழியில் பெண் விடுதலை பற்றி பேசும்போது சொல்கிறார். "எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? நரிகளால் கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? அப்படித்தான் பெண் விடுதலையும்." என்கிறார்.

பெண் விடுதலை, பெண் உரிமைக்கான உந்துதல் பெண்களிடம் இருந்தே வர வேண்டும், ஆண்கள் கொண்டு வந்து கொடுப்பார்கள் எனக் காத்திருந்தால் ஏமாற்றமே எஞ்சும் என்பதுதான் அவர் சொல்லவருவது.

இப்போது ஐயன் வள்ளுவருக்கு வருவோம். இவர், 20-22 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிந்தனையாளர். தான் வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் மிக உயரத்துக்குச் சிந்தித்த அறிவாளி. பசித்தவனைக் கண்டு கசிந்த கருணையாளர். இரந்தே உயிர் வாழும் சூழல் ஏற்பட்டால், அச்சூழலை ஏற்படுத்தியவனும் அங்ஙனமே கெட்டு அழியட்டும் என குரல் எழுப்பும் கலகக்காரர். இன்றிருந்தால் மேற்சொன்ன புரட்சியாளர்களைக் காட்டிலும் கூடுதலாக, காட்டமாக, அழகாகவும் பேசியிருப்பார்.

பெண் பற்றிய கீழ்காணும் தன் குறளுக்கு என்ன விளக்கம் சொல்லியிருப்பார்?

அவரது குறளுக்கு அவரே நேரில் வந்து பொருள் சொன்னால் ஒழிய எவர் புரிதலும் தவறல்ல.

கண்டிப்பாக‌, பெண்கள் தன் வலிமையை உணர்ந்து தங்களுக்கு வேண்டியதை யாருக்காவும் காத்திராமல் தாங்களே பெறவேண்டும் என்று தான் சொல்லியிருப்பார் நம் அன்புக்குரிய புரட்சியாளர் வள்ளுவர்.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்


தற்காத்து = தன்னைக் காத்து
தற்கொண்டா(னை) = தன்னை அன்பில் கொண்டானை = தன் அன்புக்குரிய வாழ்க்கைத் துணையை.
பேணி = நலன் போற்றி
தகைசான்ற = பெருமைக்கு உரிய
சொல் காத்து = புகழைக் காத்து (பெற்று) - "சொல்" என்பதற்கு புகழ் என்ற பொருள் இங்கு.
சோர்வு இலாள் = அயற்சி அடையாள் (Never giving up attitude)

பெண் என்பவள், தன்னைக் காத்து, தன் அன்புக்குரிய கொண்டவனின் (வாழ்க்கைத் துணை) நலன் போற்றி, "தகைசான்ற சொல் காத்து" - பெருமைக்குரியவாறு நற்பெயர் பெற்று, என்றும் சோர்வின்றி இருப்பவள்.

மற்றவர்களுக்காக காத்திராமல், நீங்களாகவே உங்களைக் காத்துக் கொண்டு, உங்கள் காதல் துணைவனையும் பேணி, எல்லோரிடமும் பெருமைக்குரியவாறு நல்ல பெயர் வாங்கி, என்றும் எதற்கும் சோர்ந்து போகாது இருங்கள் (முன்னேறுங்கள்) பெண்களே என்று இக்குறளை பெண்கள் தின வாழ்த்தாகச் சொல்லியிருப்பார் ஐயன்.

அவருடன் நாமும் நம் பெண்களுக்கு பெண்கள் தின வாழ்த்தோடு, "உங்கள் முன்னேற்றம் உங்களால்தான் முடியும் - யாருக்காவும் காத்திராதீர்" என்ற பரிந்துரையும் சொல்வோம்.

வாழ்த்துக்கள், பெண்களே!

Tuesday, January 31, 2023

எப்போது திருட்டு எண்ணம் வரும்?

 


உலகத்தில் திருட்டுப் பயலுக எல்லா இடத்திலும் இருக்கானுக நாமதான் கவனமா இருக்கணும், சரி நான் அப்புறமா பேசறேன் என்று யாரிடமோ அலைபேசியில் பேசி முடித்தபடியே வந்தான் செல்வம்.

வாடா, யாரைத் திட்டிகிட்டே வந்தே?

என் நண்பனை யாரோ தொலைபேசியில் அழைத்து ஏமாற்றப் பார்த்திருக்காங்க. வங்கியில் இருந்து பேசுவது போலவும் காவல்துறை இவனைத் துரத்துவதாகவும் ஏதேதோ கதை விட்டு இவன் வங்கி விபரங்களைக் கேட்டிருக்கிறார்கள். பயல் என்னையும் அதே அழைப்பில் இணைத்து பேசச் சொன்னான். வெற்று திருட்டுக் கூட்டம் என்பது போனவுடனேயே தெரிந்து விட்டது, இணைப்பைத் துண்டித்து விட்டு அந்த எண்ணை என் நண்பனின் தொலைபேசியில் தடை செய்யவும் சொன்னேன். தப்பித்தான்.

கோவில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என்று பாடுபடுவது போலவே இணையமும் கவனமாக பாதுகாக்க வேண்டிய இடமாகிவிட்டது. சந்து பொந்துகளில் இருந்தெல்லாம் திருடர்கள் முளைக்கிறார்கள். அலைபேசிகளும், வேகமான இணையமும் அவர்களுக்கும் வசதியாகிப் போய்விட்டது.

ஆமாம்டா செல்வம், திருட்டு பெருகிப்போச்சு. காலம் மாற மாற திருட்டு எண்ணம் கூடிப் போச்சு.

அப்படியெல்லாம் ஏதுமில்லை. திருட்டு எப்போதும் இருந்தே வந்திருக்கிறது. திருட்டு என்பது மனிதர்களிடம் மட்டுமல்ல, எல்லா உயிர்களிடமும் இயற்கையாக இருப்பது.

எத்தித் திருடும் காக்கையும், காக்கைக் கூட்டில் குயில் முட்டையிடுவதும் அதே காக்கைக் கூட்டில் இருந்து பாம்பும் கழுகும் முட்டையத் திருடுவதும், மிக எளிய எடுத்துக்காட்டுகள்.

மனிதர்கள் மற்ற உயிரினங்களிடம் இருந்து திருடுவது இல்லையா என்ன?
மாட்டிடம் இருந்து பாலைக் "கறப்பது", தேன்கூட்டில் இருந்து தேனை "எடுப்பது", கோழி முட்டையை, பட்டுப்புழுவைக் கொன்று நூல் எடுப்பது என மற்ற உயிரினங்களிடம் நாம் "வேலையை" காட்டும் போது சிக்கலில்லை. வசதியாக கண்ணை மூடிக் கொள்கிறோம். மனிதர்களிடமே திருடும் போதுதான் வம்பாகிறது.

டேய், என்னடா திருடுவது தப்பில்லை என்று சொல்வாய் போல் இருக்கிறதே?

சேசே .. அப்படிச் சொல்லவே மாட்டேன்.
திருட்டு என்பது மனிதனின் சமூக வாழ்வை கேள்விக்குறியாக்கும் செயல். திருட்டு கட்டுப்படுத்தப்படாது போனால் குழுவாக நாம் கூடி வாழ முடியாது. எனவே அதைக் குற்றமாகக் கருதி தண்டனையும் கொடுத்து கட்டுப்படுத்துகிறோம்.

ஆனாலும் திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது தான். திருடன்/டி எப்போது திருந்துவான்?

திருட்டை அறம் சார்ந்த ஒன்றாகக் கருதினால், திருடும் எண்ணம் அவர் மனதில் முளையிலேயே நிறுத்தப்படும்.
ஐயன் வள்ளுவர் கள்ளாமை என ஒரு முழு அதிகாரமே எழுதியிருக்கார்.

திருடாதே, திருடாதே திருட்டினால் வரும் பொருள் முதலில் பெரிதாகத் தோன்றினாலும் முடிவில் இருப்பதையும் அடித்துக் கொண்டு போய்விடும், திருட்டு குணம் ஏற்படுத்தும் திரில் (காதல் என்கிறார்) தீராத துன்பத்தைத் தரும், அடுத்தவர் பொருளை கள்ளத்தால் கள்வோம் என நினைப்பது கூட தீங்கானது எனவே திருடலாமா என்று நினைத்துக் கூட பார்க்காதே, அளவறிந்து வாழாதோரே (living within means) திருட்டுப் பக்கம் போகிறார்கள் - எனவே உன் சக்திக்கு உட்பட்ட வாழ்க்கையை வாழ் என்கிறார். ஊரார் பொருளை திருடி வாழ்வது, ஏய்த்து, ஊழல் செய்து வெட்டிச் செலவு செய்வது எல்லாம் "அளவின் கண் நின்று ஒழுக முடியாதவர்கள்" (Within means வாழ முடியாதவர்கள்) செய்வது என்கிறார்.

இந்த "அளவுக்குள் வாழ்" என்பதை அழுத்தி அழுத்தி பலமுறை சொல்கிறார். உன் "அளவு" கடந்த வாழ்க்கையே திருட்டு எண்ணத்தை ஏற்படுத்துகிறது, "அளவு அறிந்தவர்" நெஞ்சம் அறம் பக்கம் நிற்கும், "களவு அறிந்தவர்" நெஞ்சம் வஞ்சத்தின் பக்கம் செல்லும் - நல்லவனாக இருக்க அளவோடு வாழ், களவு செய்யாதே என்கிறார்.

ஐயன் வழி நடக்க முயலும் நான் திருட்டு சரி என்பேனா?
திருட்டு பற்றிய நம் எண்ண-முரணை (Hypocrisy) எடுத்துக்காட்டுகளோடு சொன்னேன், அவ்வளவுதான்.

ஒரு வேலையாக இந்தப் பக்கம் வந்தேன் அப்படியே உன்னைப் பார்த்திட்டு போகலாம் என்று வந்தேன். அப்புறமாக சாவகாசமாக வர்றேன் என்றபடியே கிளம்பினான், செல்வம்.

டேய் இருடா. அந்த "Within means" குறள்ல ஒன்றையாவது எனக்கு விளக்கிட்டு இந்த தேநீரைக் குடுச்சிட்டு போ.

சரி சொல்றேன் கேள். அப்படியே புரியும். மிக எளிய குறள். அதன் சரக்கு தான் கனம்.

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்


அளவின்கண் = அளவுக்குள்
நின்று ஒழுகல் ஆற்றார் = நின்று வாழ முடியாதவர்
களவின்கண் = களவுக்குள்
கன்றிய = மிகுந்த
காதலவர் = ஆசையுடையவர்

அளவுக்குள் வாழ முடியாதவரே
திருட்டுக்கு ஆசை படுகிறவராகிறார்.


யோசிச்சுப் பாரேன். சோத்துக்கு இல்லாம திருடுறவன் வெகு குறைவு. பேராசையில் திருடுபவரே மிகப் பெரும்பாலும்.

எனவே, நாம் அளவறிந்து வாழ்வோம், தனிச்சொத்தோ பொதுச் சொத்தோ - கள்வோம் என்ற எண்ணம் கூட வராது வாழ்வோம், திருட்டுப் பசங்களிடம் இருந்து நம்மைக் காத்துக் கொள்வோம்.

நேரமாயிடுச்சு இன்னொரு நாள் வர்றேன், காபி நல்லாயிருந்துச்சு என்றபடியே கிளம்பினான்.

டேய், அது "டீ" டா.

 

 

Saturday, December 31, 2022

எவ்வளவு விரைவாகக் கொடுக்க வேண்டும்?

 

உலகின் மிகப்பெரும் கருணையாளர்கள் எனப் பட்டியலிட்டால் கண்டிப்பாக வள்ளுவர் அதில் இடம்பெறுவார்.

துன்பம் கொள்ளும் மனிதனைக் கண்டு கசிந்து உருகுகிறார். வசதியானவர்கள் வறியவர்களுக்கு கணக்குப் பார்க்காமல் உதவிட வேண்டும் என்கிறார். தன்மானக்காரர் வேறு. வறுமை பீடித்து இரக்கும் நிலை (begging) போல இழிநிலை வேறு இல்லை என்கிறார். இரவு (இரத்தல் - begging பற்றியது), இரவு - அச்சம் (இரப்பதற்கு அஞ்சவேண்டும்) என்று இரு முழு அதிகாரங்கள் எழுதியிருக்கிறார்.

எவ்வளவு முயன்றும் இரந்தே உயிர் வாழவேண்டும் என்ற நிலை ஒருவனுக்கு உருவாகிவிடுகிறது என்றால், அப்படியான சூழலை உண்டாக்கியவனும் அப்படியே இரந்து கெட்டு அழியட்டும் என கலகக்குரல் எழுப்புகிறார்.

இவ்வளவும் சொல்லிவிட்டு, செல்வம் சேர்ந்து இருப்பவரிடம் "தாராளமாகக் கொடு-கெட்டுப்போகமாட்டாய்" என முழுதாக 10 குறட்பாக்களை எழுதுகிறார்.
இல்லறத்தில் இருப்பவரிடம் ஈகை எனும் கொடுக்கும் குணம் பற்றி கூறும் போது இவ்வாறு சொல்கிறார்.

பெரும்பாலான அற நூல்கள் கொடுப்பதை மகிழ்வான, உயர்ந்த, பெருமைப்படும் ஒன்றாகவே சொல்லும். ஐயன் மாறுபடுகிறார். கொடுப்பதால் தலைக்கனம் கூடி விடக் கூடாது என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது.

உதவி கேட்டு வந்தவரது இயலாமையைக் கேட்டுக் கொண்டு இருந்து தாமதிக்காதே என்கிறார். இரப்பவனது முகம், கிடைக்கும் உதவியினால் மலரும் வரை உதவிடும் உனக்கு மகிழ்ச்சியில்லை, எனவே உடனடியாக துன்பம் களை என்கிறார்.

நின்று நிதானித்து யோசியுங்கள்.
நீங்கள் ஒருவருக்கு உதவுகிறீர்கள். எதிரில் இருப்பவரோ தன்மானம் தடுத்தும் வேறுவழியின்று இரந்து நிற்கிறார். துன்பத்தில் இருக்கிறார். பொருள் கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் அவர் முகம் மலரும் கணம் வரை உனக்கும் துன்பமே என்ற சிந்தனை எவ்வளது மனிதம் கொண்டது.

குறள் இதுதான்:
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு

பொருள்கோள் வகைப்படி மாற்றி அமைத்துப் பார்க்கும் போது,

இரந்தவர் இன்முகம் காணும் அளவு
இரக்கப் படுதல் இன்னாது


/* இரந்தவர் = உதவி கேட்டு வந்தவர்
இன்முகம் = மலர்ந்த, மகிழ்வான முகம்
காணும் அளவு = காணும் வரை
இரக்கப்படுதல் = உதவலாம் என்று நினைக்கும் ஈகை உள்ளம்
இன்னாது = இனிமை அடையாது */

உதவி கேட்டு வந்தவரது துன்பக்கதையைக் கேட்டு காலம் தாழ்த்துதல் இன்பம் தராது, இரப்பவரது முகம் மலரும்படியாக உடனடியாக உதவிடு என்கிறார்.

சொல்லாமல் புரிய வைத்தது மேற்சொன்ன பணிவும், இரப்பவனது நிலையை எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு விரைவாக மாற்ற உதவிடு என்ற கருத்தும்.

தன்மானம் தடுத்தும் வேறு வழியின்றி இரந்து நிற்கும் மனிதனது பதைபதைப்பைக் கண்டு ஐயன் கலங்குகிறார். உதவிடும் நிலையில் உள்ளவனிடம் உடனடியாக உதவு, அவன் முகம் மலரும் அளவுக்கு உதவு, அவன் பதைபதைப்பு விலகும் வரை உனக்கும் இன்பம் இல்லை என்கிறார்.

முதல் முறை படித்தபோது இக்குறளின் அடர்த்தி வெகு நாட்களுக்கு அலைகழித்தது.

Monday, October 31, 2022

சேற்றில் சிக்கிய யானை

 

​​
​ உலகம் இயங்கும் விதம் வியப்பானது என்றபடியே வந்தான் செல்வம்.

எதைப்பற்றிடா சொல்கிறாய்?

'யூவால் ஆரரி' எழுதியிருக்கும் சேப்பியன்கள் என்ற புத்தகத்தைப் படித்தேன்; இயற்கை யார் பக்கமும் சாய்வதில்லை, வலிமை கொண்டவர்கள் வாழ்கிறார்கள் வலிமை குறைந்தால் எதிர்பாரா இடங்களில் இருந்து கூட ஆபத்துகள் வரும் - வரலாறு அப்படித்தான் சொல்கிறது என்கிறார்.

வரலாற்று ஆசிரியராக அவர் பல எடுத்துக்காட்டுகளையும் விரிவாக விளக்குகிறார்.

வரலாறு மாத்திரம் அல்ல, அறிவியல் அறிஞர் டார்வினின் படிமலர்ச்சி [Evolution] கோட்பாட்டில் இருந்து பிறந்த புகழ்பெற்ற "தக்கன பிழைக்கும்" [Survival of the fittest] என்ற தத்துவமும் அதைத்தானே வேறு மாதிரி சொல்கிறது.

வலிமை உள்ளவரை சிக்கவில்லை. ஏதோ காரணங்களால் உடல் நலமோ, பொருள், உறவு, அறிவுரை சொல்லும் சுற்றம் போன்றவை கெட்டுப்போய் குழப்பத்தில் சிக்கிக் கொண்டால் அது நாள் வரை மறைந்திருந்த சிறு எதிரிகள் கூட வெளிப்பட்டு கோரைப் பற்களைக் காட்டக்கூடும். உண்மையிலேயே நிலவரம் கலவரமாகப் போய் இருந்தால் உயிரையே கூட எடுத்துவிடக் கூடும்.

வரலாறும் அறிவியலும் பட்டறிவும் காட்டும் இக்கருத்தை ஐயன் வள்ளுவர் சொல்லாமலா இருப்பார்.

களம் பல கண்ட போர் யானையாகினும் எதிர்பாராச் சூழலால் சேற்றில் சிக்கிக் கொண்டால் சிறு நரி கூட அந்த வலிமை மிக்க யானையைக் கொன்றுவிடும் என்கிறார்.

கால்ஆழ் களரில் நரிஅடும் கண்அஞ்சா
வேல்ஆழ் முகத்த களிறு


கால் ஆழ் களரில் = கால் ஆழமான சேற்றில்
நரி அடும் = நரி கொல்லும்
கண் அஞ்சா = பயம் இல்லா (கண்ல பயம் தெரியாத)
வேல் ஆழ் முகத்த களிறு = முகத்தில் வேல் ஆழமாக பதிந்த யானை (களம் பல கண்டு  விழுப்புண் கொண்ட போர் யானை)
களிறு = யானை

பயமறியாத, களம் பல கண்ட, ஆழமான விழுப்புண் கொண்ட வீரமான யானையாக இருந்தாலும் கால் அசைக்க முடியாத ஆழமான சேற்றில் சிக்கிக் கொண்டால் சிறு நரி கூட அம்மாம்பெரிய யானையைக் கொன்றுவிடும்.

அதனால, எப்பவும் நீ இருக்கும் இடம் பற்றி கவனமாக இரு என்கிறார். ஒன்றைச் சொல்லி இன்னொன்றைப் புரிய வைக்கிறார். ("பிறிது மொழிதல் அணி" - நினைவு இருக்கா?)

வேந்தனோ, படைத்தலைவனோ, ஏன் கொள்ளைக் கூட்டம் நடத்தும் நபராகக் கூட இருக்கலாம். அவரவர் தம் வலிமை குன்றாது இருக்கும் வரை சிக்கவில்லை. யாருக்கும் அஞ்சாத, களம் பல கண்டு விழுப்புண் கொண்ட வீரராக, எல்லோரும் பம்மி வணங்குபவராகக் கூட இருக்கலாம். ஆனால், காலச்சூழலில் தன்னைச் சுற்றி சரியான இடம் அமைத்துக் கொள்ளாமல், இயங்க முடியாத சேற்றில் சிக்கிய யானையாகிவிட்டால் காத்திருக்கும் நரிக்கூட்டம் கமுக்கமாக, என்றைக்குச் செத்தார் என்றுகூட அறிய முடியாதவாறு கொன்றே விடும். - அறிவியல், இலக்கியம், வரலாறு எல்லாம் சொல்லும் செய்தி இது.

திகில் செய்திகள் (facts) போதும். வலிமை குன்றா காபி ஒன்று போட்டுக் கொடேன் - அதான் Strong coffee என்றான் செல்வம் சிரித்தபடி.

Friday, September 30, 2022

பிரிவால் கொடுமையாக நீளும் இரவுகள் [குறளும் பொருளும்]

 உலகம் எங்கும் என்றும் மாறாத மனித உணர்வுகளுள் ஒன்று பிரிவுத்துயர். இன்று என்னதான் தொலைத்தொடர்புகள் வளர்ந்துவிட்ட போதிலும் அன்புக்குரியவர் அருகில் இல்லை என்ற துயரம் எல்லோருக்கும் நேர்வது.

காலையில் வேலைக்குப் போகும் போது செல்ல மகள்/ன் முகம் வாடிப்போவது முதற்கொண்டு நிரந்தரமாக இறப்பு பிரித்துக் கொண்டு போகும் போது ஏற்படும் துயரம் வரை நாம் சந்திக்கும் பிரிவுகள் வலிமிகுந்ததே.

நிரந்தரப் பிரிவு ஒரு வகை வலியெனில் தற்காலிக பிரிவுகள் இன்னொரு வகை. எதிர்பார்த்து நடக்கும் பிரிவுகளான நண்பர்கள் படிப்பு காரணமாக, அல்லது பெற்றோருடன் வேறு ஊருக்கு மாற்றலாகிப்போவது என இளவயது பிரிவுகள். பின் நடுவயதில் மகள்/ன் கல்லூரி, மணம், பணிநிமித்தம் காரணமாக வீட்டைவிட்டு கிளம்பும் போது ஏற்படும் பிரிவுகள் என பிரிவு எப்போதும் கண்ணீர் நிரம்பியது. யோசித்துப் பார்த்தால் மருத்துவமனைகளை விட பேருந்து, தொடர்வண்டி, வானூர்தி நிலையங்கள் காணும் கண்ணீர் மிக அதிகம்.

அது கிடக்கட்டும். காதல் ஏற்படுத்தும் பிரிவுத் துயர் சற்று சிறப்புற்றது.
காதல் துணையின் பிரிவு தவிக்கவிடும். வெளியில் யாரிடமும் சொல்லி ஆறுதல் தேட கூட முடியாது. தோழியோ தோழனோ இருப்பின் அவரிடம் மட்டும் சொல்லிப் புலம்பலாம். இன்றைய தொலைத்தொடர்புக் கருவிகள் இல்லாத முற்கால காதலர்களை நினைத்துப் பாருங்கள். தென்றலையும் மேகத்தையும் தூதுவிட்டுக் கொண்டு காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

அப்படியான ஒரு பெண், பிரிவின் வலி தாளாது தவிக்கும் ஒரு காட்சியை திருக்குறளில் அமைத்திருக்கிறார் ஐயன்.

திருக்குறளை நாடக வடிவமாகவும் பார்க்கலாம், ஒவ்வொரு அதிகாரமும் ஒவ்வொரு காட்சியாகவே எழுதப்பட்டிருகிறது - அதிலும் குறிப்பாக காமத்துப்பால் நாடகக் காட்சிகளேதான் என்பார்கள். அந்தப் கோணத்தைப் (perspective) பற்றி இன்னொரு நாளில் பேசுவோம். இன்று பிரிவுத்துயர் கொண்டு வாடிப்போய் இருக்கும் தலைவி தன் தோழியிடம் பேசுவது/புலம்புவது போன்ற ஒரு அதிகாரம் படர்மெலிந்திரங்கல் [படர் மெலிந்து இரங்கல்]. இதில் இருந்து ஒரு குறளையும் அதன் அசத்தும் கற்பனையும் பார்க்கலாம்.

காட்சி இதுதான்:
பயல் இவளை வீட்டில் விட்டுவிட்டு பணி நிமித்தமாகவோ, வேறு காரணமாகவோ எங்கேயோ போய் இருக்கிறான். போனவன் பற்றி தகவல் ஏதுமில்லை. அம்மிணி பசலை நோய் கொண்டு வழி மேல் விழிகொண்டு காத்திருக்கிறாள். சில பல நாட்களும் போய்விட்டது. புலம்புகிறாள். கண்ணீர் சிந்துகிறாள்.

ஏதேதோ சொல்லிப் புலம்புகிறாள். தவிக்க விட்டுட்டு போயிருக்கானே, வரட்டும் பெரிய சண்டை போடுகிறேன் என்கிறாள். உடனேயே, அய்யோ நட்போடு இருக்கும் போதே இவ்வளவு துன்பம் தருகிறானே பகையாகிப் போனால் சமாளிக்கவே முடியாதே என்றும் சொல்லிக் கொள்கிறாள்.

தான் இப்படி அவனை நினைத்து வருந்துவது யாருக்கும் தெரியாமல் இருக்கும்படி நடந்துகொள்ளலாம் என்றால் இந்தக் காதல் நோய் மறைக்க மறைக்க ஊற்று போல் பெருகுதே, நீ சம்பாதித்து கிழித்தவரை போதும், என்னப் பார்க்க வாடா என்று தூது விடலாம் என்றாலும் என் நாணம் தடுக்கிறது. நாணமும் காதலும் மாறிமாறி வந்து எதும் செய்ய விடாது பாடாய்ப் படுத்துகிறது. அவன் இருக்கும் இடத்திற்கு என் மனம் போவது போல் என் உடலும் போக முடிந்தால் இப்படி கண்ணீர் வெள்ளத்தில் மிதக்க மாட்டேனே என்று அழுகிறாள்.

அந்த அதிகாரதில் வரும் ஒரு குறள்:

கொடியார் கொடுமையின் தாம்கொடியது இந்நாள்
நெடிய கழியும் இரா

கொடியார் = தன்னைத் தவிக்க விட்டு போயிருக்கும் காதலனைச் சொல்கிறாள். தனிமைக் கொடுமையில் தள்ளிய கொடுமைக்காரன்.

கொடுமையின் = அவன் ஏற்படுத்தியிருக்கும் கொடுமையை விட

தாம் கொடிது = இவை கொடுமையாக இருக்கிறது

நெடிய கழியும் இரா = நீண்டு, நெடியதாக மெதுவாகக் கழியும் இரவுகள்.

இப்படிப் படிக்கலாம்:
இப்போதெல்லாம் நெடிய கழியும் இரவுகள் அந்தக் கொடுமைக்காரன் செய்யும் கொடுமையை விட கொடிதாக இருக்கிறது.

இப்போது அவன் அருகில் இல்லாத நாட்களில் உறக்கம் இன்றி இரவுகள் நீண்டு போகிறது. இதுவே பெரும் கொடுமையாக இருக்கிறது - எவ்வளவு துன்பம் என்றால் அந்தக் கொடுமைக்காரன் ஏற்படுத்தியிருக்கும் கொடுமையைக் காட்டிலும் பெரிதாக இருக்கிறது.

கொடுமைக்காரா என்று அவனுக்கு ஒரு திட்டு, அவன் அருகில் இல்லாதது கொடுமையாக இருக்கு என்ற புலம்பல், அவன் நினைவால் நீண்டு போகும் உறக்கமற்ற இரவு மேற்சொன்ன கொடுமையை விட, துன்பமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு - எல்லாம் ஏழே சொற்களில்.

தளை தட்டாது, வெண்பா வடிவம் கெடாது, அழகுணர்ச்சி போகாது படிப்பவரை வாய்பிளக்கச் செய்யும் ஐயனின் மொழியாளுமை.

அதிகாரம் முழுதும் படிக்கையில் அப்பெண்ணின் மீது பரிதாபம் மட்டுமல்ல நமக்கே கண்ணீர் முட்டும்படி எழுதியிருக்கிறார்.

உண்மையில் திருக்குறள் ​மொத்தமும் தோண்டத் தோண்ட வியப்பூறும் மணற்கேணி.

Wednesday, August 31, 2022

துட்டு கொடுத்தாவது அந்தத் துன்பத்தை வாங்கிக்கோ - வள்ளுவர்

 

 

உலகத்துல யாராச்சும் இப்படிச் சொல்லி கேள்விப்பட்டு இருக்கியா?


டேய், ஒரேடியா கதை விடாதே. அப்படியெல்லாம் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

அட, உண்மையாத்தான் சொல்றேன். வள்ளுவர் ஒரு so called "துன்பத்தை" ("கேடு" என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்) அடைய பொருள் (காசு, பணம், துட்டு, மணி மணி) கொடுக்க வேண்டி இருந்தாலும் பரவாயில்லை; பொருள் கொடுத்தாகிலும் அதைப் பெறு என்கிறார். அது என்னவாக இருக்கும்? யோசிச்சுப் பாரேன்.

எவ்ளோ யோசிச்சாலும் தோணலைடா. நீயே சொல்லிடு.

சரி. சொல்றேன்.
ஐயன் மனிதர்கள் எல்லோரையும் நேசித்தவர். ஒருத்தருக்கு ஒருத்தர் உதவணும், நமக்குத் தீங்கிழைத்தவருக்கும் அவர் நாண நல்லதே செய்யணும் என்ற பெரிய மனசுக்காரர். சமூகம் ஒற்றுமையாக இருக்க எல்லோருக்கும் உதவி செய்யும் மனம் வேண்டும் என்கிறார். நாம் சம்பாதித்த அறிவு, பொருள் மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்று நினைக்கிறார். தன்னலம் இன்றி பொதுநலனுக்காக செய்வதை இன்றைய பேச்சுவழக்கில் 'தொண்டு செய்வது' என்கிறோம் இல்லையா? அதைச் சொல்கிறார்.

தொண்டு-ன்னு பொதுவா சொல்லிடறோம். எதையும் எதிர்பார்க்காமல் தங்கள் அறிவு, நேரம், உழைப்பு என தொடர்ச்சியாக பொது நோக்கத்துக்காகக் கொடுப்பது என்பது அவ்ளோ எளிதானது அல்ல. சொல்லிடலாம்; செஞ்சு பார்த்தா தான் அதில் உள்ள சிக்கல்கள் தெரியும். பல நேரங்களில் எப்படா முடியும் என்று "துன்பமாக" தோன்றும்.

கொஞ்சம் அப்படி-இப்படி இடைஞ்சலாக, துன்பமாக இருந்தாலும் நீ செய்யும் செயல் பொது நலனுக்காக. கைமாறு எதிர்பாரா சேவை செய்கிறாய். நீ செய்யும் செயலால் சில-பலர் நன்மை அடையப் போகிறார்கள். இப்படியான செயலைச் செய்ய ஒரு வேளை, உன் கைப்பொருளை செலவழிக்க வேண்டி இருந்தாலும் தயங்காதே. தொண்டு செய்யும் ஒருவனுக்கு இதனால் கேடு வந்தாலும் பரவாயில்லை, செலவழித்தாகிலும் அந்தத் "துன்பத்தை" அடைந்திட வேண்டும் என்கிறார்.

உண்மையில், பொது நலனுக்குப் பாடுபடுவது இன்பமான ஒன்று; அப்படிச் செயல்படும் போது வரும் சிக்கல்களும் இடைஞ்சல்களும் கூட துன்பம் கிடையாது என்ற மறைபொருள் (hidden message) கொண்ட குறள் அது.

எங்கள் ஆசிரியர் அடிக்கடி சொல்வார்: "திருக்குறள் சந்தன மரம் போல. தேய்க்கத் தேய்க்க மணக்கும்" என்று.

யோசிச்சுப் பாரேன். ஏழே சொற்களில் இவ்வளவு அடர்த்தி.
வாவ்.

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து

'ஒப்புரவு அறிதல்' என்ற அதிகாரத்தில் உள்ள ஒரு குறள் இது. ஒப்புரவு என்ற சொல்லே வியப்புக்குரிய ஒன்று.

ஒப்பு = சமம்.
ஒப்புரவு = பிறரையும் தனக்குச் சமமாகக் கருதி உதவுதல்.

குறளை எளிமையாகப் படித்தால்,

ஒப்புரவால் ஒருவனுக்கு கேடு வரும் என்றால்,
அந்த "கேடு" விலை கொடுத்து கூட பெறும் தகுதி படைத்தது.

இந்த முழு அதிகாரமுமே இப்படித்தான் இருக்கும். படித்துப்பார் சொக்கிப் போவாய். இதில் இருக்கும் பத்து குறள்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது போல எழுதியிருப்பார்.

கைமாறு (பதில் உதவி) எதிர்பார்த்தா மழை பெய்யுது? அது போல எதையும் எதிர்பாராது செய்; உன்னிடம் உள்ள பொருள் எல்லாம் தொண்டாற்றவே, தயங்காமல் செய்; தொண்டாற்றவது போன்ற நல்ல செயல் எந்த உலகிலும் இல்லை.
நாம் உயிரோடு இருப்பதே எதையும் எதிர்பாராது பொதுச் சேவை செய்யவே. நல்ல உள்ளம் கொண்ட உன்னிடம் சேர்ந்திருக்கும் செல்வம், ஊர் நடுவில் எல்லோருக்கும் பயன்படும் கிணறு நீர் நிரம்பியது போன்ற நன்மை செய்யக்கூடியது எனவே தாராளமாக எல்லோருக்கும் உதவு. மருந்துக்காக தன்னையே தரும் மருத்துவ மரம் போல உன்னிடம் உள்ள எதையும் பொது நலனுக்காகக் கொடு. தப்பில்லை.

Difficult days என்பது போல கொஞ்சம் இடறு நேரும் காலங்கள் ஆனாலும் உன் தொண்டாற்றும் மனதைத் தளரவிடாதே.

என்றெல்லாம் சொல்லிவிட்டு கடைசியாக மேலே சொன்ன குறளைச் சொல்கிறார் ஐயன்.

தொண்டாற்றுவதால் கேடு வருவது போல் இருந்தால் விலை கொடுத்து கூட அந்த அந்தத் துன்பத்தைப் பெறலாம் என்று முடிக்கிறார்.

-----

தன்னலமின்றி தமிழுக்காக தங்கள் நேரம், உழைப்பு, அறிவு என இயன்றதையெல்லாம் கொடுக்கும் தமிழ்ச் சங்கத்தாருக்கும் தமிழாசிரியர்களுக்கும் இக்குறளை மேற்கோளிட்டு பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.
உங்களது இந்தத் "துன்பம்" பெரிதும் மதிக்கப்படும் ஒன்று.

வாழ்க தமிழ். 
வாழிய தமிழுக்கு உழைக்கும் உங்கள் நல்லுள்ளம், தொண்டுள்ளம்.