Showing posts with label ஞாயிறு போற்றுதும். Show all posts
Showing posts with label ஞாயிறு போற்றுதும். Show all posts

Saturday, October 5, 2019

முத்தம் குடு Vs முத்தம் தா

​
இரண்டுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?

வேறுபாடு இருந்தா என்ன,  என்ன இல்லாட்டா என்ன? கேட்ட முத்தம் கிடைச்சா போதும்தான். சரிதானே?

ஆனா, ஒரு கிளுகிளுப்பான வேறுபாடு இருக்கு.  என்னன்னுதான் பார்த்திடுவோம்.

சூட்டோட சூடா முதல்ல கொஞ்சம் இலக்கணம் படிச்சிடலாம்;  முத்தத்துக்கு அப்பால வருவோம். (காதுகள் கிடைக்கும் போதே இலக்கணம் சொல்லிடணும்)

கொடு, தா, ஈ எனும் கிட்டதட்ட ஒரே பொருள் கொடுக்கும் மூன்று சொற்களிடையே ஒரு மெல்லிய வேறுபாடு காட்டுகிறார் தொல்காப்பியர்.

மூன்றும் ஒரே செயலைக் குறிப்பதுதான் என்று முதலிலேயே(1) சொல்லிடறார்.
'ஆனா பாருங்க..' அப்படின்னு ஒரு * போட்டு அடுத்த மூன்று தனித்தனி வரிகளில் வேறுபாட்டை விளக்கறார். (2,3,4)

* ஈ என்னும் சொல்லை இழிந்த நிலையில் இருப்பவர் அவருக்கும் உயர் நிலையில் இருப்பவரிடம் சொல்லிக் கேட்பது. (ஈ என இரத்தல் இழிந்தன்று -  புறநானூறு)
* தா என்னும் சொல்லை சரிக்கு சரியாக இருப்பவரிடம் சொல்லிக் கேட்பது.
* கொடு என்ற சொல்லை உயர்ந்த நிலையில் இருக்கும் போது அவ்வளவு உயர் நிலையில் இல்லாதவரிடம் கேட்பது. 

கொடு என்றாலே வளைதல் என்று முன்பு ஒரு முறை பார்த்தோம் (கொடுவாள், கொடுக்காப்புளி, கொடுக்கு என வளைந்ததற்கு எல்லாம் அதன் பெயர்கள்  காரணப்பெயர்களாக அமைந்தவையே). உயர்ந்த இடத்தில் இருந்து வழங்குபவரது கைகள் வளைந்து இருப்பதால் அது 'கொடு'ப்பது என்று சொல்வது உண்டு.

இப்போ, முத்தத்துக்கு வருவோம்.

காதலில் எப்படியும் முத்தத்தைக் கேட்கலாம் வழங்கலாம்; இருந்தாலும் நாம இலக்கணம் நினைவு வெச்சுக்க முத்தம் கேட்பதை இணைத்து நினைவு வெச்சுக்கிட்டால் எளிதில் மறக்காது.



நிதானமாக வளைஞ்சு 'கொடு'ப்பது - முத்தம் கொடுப்பது. கொஞ்சம் உயர் நிலையில் இருந்து வளைஞ்சு கொடுப்பதால் இது மூன்றாவது வகை.





அவசர அவசரமாக 'அப்படியே' தருவது/பெறுவது - முத்தம் தருவது.  தன் நிலையில் இருந்து தாழாது/உயராது அப்படியே இருந்தபடியே தருவது/பெறுவது.


ஆச்சா? இப்போ முதல் வகை.
இரந்து (கெஞ்சி, கூத்தாடி) பெறுவது. இதைப்  படம் போட்டுக் காட்ட வேணாம். அவரவர் கற்பனைக்கே விட்டுடலாம். முன்பே சொன்ன மாதிரி காதலில் எப்படிக் கேட்டாலும் சரியே. கெஞ்சுவதும் மிஞ்சுவதும் அவரவர் காதலின் அளவு; அதுக்கு எதுக்கு படம் போட்டுக்கிட்டு.. :-)

எனவே நண்பர்களே,
* தன் நிலையில் இருந்து இறங்கி, இரந்து கேட்பவருக்கு வழங்குவது - ஈவது.
* சரி நிகராய் இருப்பவருக்கு வழங்குவது - தருவது
* உயர் நிலையில் நாம் இருந்து 'வளைஞ்சு' வழங்குவது - கொடுப்பது.

பேச்சு வழக்கில் தா, கொடு என்பதற்குள் இருக்கும் வேறுபாட்டை நாம பெரிசா கண்டுக்கலைன்னாலும் இப்படி ஒன்னு இருக்குன்னு தெரிந்து வைத்துக்கொள்வதில் தப்பு இல்லைதானே.
​
நாளபின்ன, என்ன வகை முத்தம் கிடைத்தது; கிடைத்த/வழங்கிய முத்தம், கொடுக்கப்பட்டதா தரப்பட்டதான்னு ஆராய்ச்சியில இறங்கலாம் பாருங்க.. :-)


இதுதான் அந்தத் தொல்காப்பிய வரிகள்:
ஈ தா கொடு எனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகு இடன் உடைய. 1

அவற்றுள்,
ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே. 2
தா என் கிளவி ஒப்போன் கூற்றே. 3
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே. 4


தமிழ் வகுப்பில் இளம் மாணவர்களுக்கு சொல்லித்தர இதே கட்டுரை வேறொரு வடிவில் இங்கே: கடன் தா  Vs  கொடு


  #ஞாயிறு போற்றுதும்.

Saturday, April 7, 2018

ஒரு கதை சொல்லட்டுமா..



பெரியவர்களுக்கான பொதுவான மாத்திரையை சிறியவர்களுக்கு கொடுக்கும்படி வந்தால் என்ன சொல்வாங்க? முழு மாத்திரை தேவை இல்லைங்க, பாதியா உடைச்சு அரை மாத்திரை குடுங்க போதும்-ன்னு நம்ம ஊர்ல சொல்லிக் கேட்டிருப்போம், இல்லையா? அதாவது, தேவையைப் பொறுத்து அளவை மாற்றிக் கொள்வோம்.

அது மாதிரியே பாதியா வெட்டி அரை மாத்திரை எடுத்துக் கொள்ளும் எழுத்து வகை தமிழில் உண்டு.

குற்றியலுகரம்.

மேலே சொன்ன மாத்திரைக் கதை ஒரு புரிதலுக்காக. உண்மையில் தமிழில் மாத்திரை என்பது கால அளவு. ஒரு எழுத்து, ஒலிக்கும் நேரத்தைக் குறிக்க பயன்படுத்துவது. தோராயமாக, கண் இமைக்கும் நேரம், கை சொடுக்கும் நேரம் எல்லாம் ஒரு மாத்திரை என்பார்கள். இன்றைய அளவுப் படி கிட்டத்தட்ட அரை நொடி.
ஆச்சா?

தமிழின் குறில் எழுத்துக்களுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரைகள், மெய்யெழுத்துக்களுக்கு அரை மாத்திரை அளவு என்பது விதி.

இப்போ தலைப்புக்கு வருவோம்.

ஒரு கதை சொல்லட்டா?
உங்க மேல ஒருத்தி/ஒருவன் கிறுக்கா இருக்கறதா வைப்போம்.

ஒரு நாள், உங்க கிட்ட வந்து "உம்மேலே கிறுக்கு" அப்படின்னு சொல்றாள்/ன்.
நீங்களும் சொக்கிப் போயிடறீங்க.
அப்புறம்?

மேலே என்ன ஆச்சுன்னு ஆராயலாம் தான், ஆனா இப்போ நம்ம ஆர்வம் இருக்க வேண்டியது இலக்கணத்தின் மீது.

"உம்மேலே கிறுக்கு"
அந்தச் சொற்களில் உள்ள இரண்டு "உ" க்களையும் சொல்லிப் பாருங்கள். முதல் உ-வை முழுசாச் சொல்வோம். கிறுக்கு-ல் (கு=க்+உ) உள்ள "உ" பாதில நின்னுடும்.  சொல்லித்தான் பாருங்களேன். "கிறுக்உ" என்று ஒலிக்காது.

உங்க ஆளு சொன்னதுல, வெட்கத்தில குறுகிப் போய் நீங்க நிக்கறீங்களோ இல்லையோ, அந்த "உ" குறுகி நின்னுடும். இப்படிக் குறுகி, முழு மாத்திரை அளவுக்கு ஒலிக்காகாமல் அரை மாத்திரையில் ஒலிக்கும் உகரம், குறுகிய + உகரம் = குற்றியலுகரம்.
அம்புட்டுதான்.

கதை சொல்லறேன்னு உங்க காதை வாங்கி இலக்கணம் சொல்வது தப்பா?
தெரியாது. ஆனா இன்னொரு குறிப்பு சொல்ல தெரியும்.

தெரியாது ->  இந்தத் "து"வில் உள்ள "உ" (து=த்+உ) முழுசா ஒலிக்குது. அதனால இது முற்றிய + உகரம் = முற்றியலுகரம்.

அவ்வளவுதான் குற்றிய/முற்றிய உகரங்கள்.

ஒரே கல்லுல இரண்டு மங்கா:
ஒரே கதையில குற்றியலுகரம் மற்றும் முற்றியலுகரம்.

 ​#ஞாயிறு போற்றுதும்.