அப்பாவின் நண்பர் ஒருவர் வந்திருந்தார். முதல் முறையாக அவரைச்
சந்திக்கிறேன். அவர் இளங்கோ என்றும் சில பல ஆண்டுகளுக்கு முன் ஒரே
அலுவலகத்தில் பணி புரிந்ததாகவும் அப்போது நண்பர்கள் ஆனதாகவும்
சொன்னார்கள். அறிமுகப் படலத்திற்குப் பின் கொஞ்சம் சரளமாக பேசிக்
கொண்டிருந்தோம்.
தமிழர் பண்பாட்டின் படி கொஞ்ச நேரத்தில் அரசியல் பேசத் தொடங்கினோம்.
அவரோட
தந்தையார், அறிஞர் அண்ணாவின் கொள்கைகள் மற்றும் தமிழ் இரண்டிலும் கவரப்பட்ட அன்றைய
டிபிகல் தமிழக இளைஞர் என்றும், எப்படி இன்றைய தமிழகம் அண்ணாவால் வடிவு
பெற்றது என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். ஆர்வமாகத்தான் போய்க்
கொண்டிருந்தது, அல்லது அப்படித் தோன்றியது.
என் அப்பா பேச்சை மாற்ற நினைத்து, "உங்க அண்ணன் எப்படி இருக்கார்" என்றார்.
"செங்குட்டுவன்
நல்லா இருக்கானுங்க, ரிட்டையர் ஆனப்புறம் கேரளால மகள் வீட்டுக்குப்
பக்கத்துலயே வீடு வாங்கிட்டு போய்ட்டார். ஒரே மகள், பக்கத்திலேயே
இருக்கலாம்னு அங்க போய்ட்டார்".
என் முகத்தைப் படித்தவராக அப்பா சொன்னார், "இவரும் இவர் அண்ணனும் இரட்டையர்கள், அவர் பெயர் செங்குட்டுவன்".
செங்குட்டுவன் - இளங்கோ.
அட!
இளங்கோ கிளம்பும் போது அவர் அண்ணன் செங்குட்டுவனின் மகளுடைய பெயர் என்ன என்று கேட்டேன். சொன்னார்.
"மணிமேகலை"
_________
உண்மையில் இது சில வாரங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி. மானே தேனே சேர்த்தது மட்டும் என் பங்கு.
*******
No comments:
Post a Comment